எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள ‘விழித்தெழு தமிழா’ செம்மணி எழுச்சிக் கூட்டம் தொடர்பான விளக்கமளிப்பு சந்திப்பில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவிப்பு
” தற்போது எம் தமிழ் மக்கள் மத்தியில் எரியும் பிரச்சனையாகவும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு எமது கடமையாகவும் உள்ள செம்மணி புதைகுழி விவகாரத்தை நாம் எவ்வளவு வீச்சாக உலகின் பார்வைக்கும் காதுகளுக்கும் கூட்டாக எடுத்துச் செல்கின்றோமோ அந்தளவிற்கு இலங்கை அரசின் இனப்படுகொலையாளர்களின் முகத்திரைகளை கிழித்தெறியலாம். இந்த வகையில் கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்து திறந்த வெளி அரங்கில் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விழித்தெழு தமிழா என்னும் எழுச்சிக் கூட்டத்தை நாம் ஒரு முக்கிய தளமாகப் பயன்படுத்த வேண்டும். அந்த திறந்த வெளி அரங்கில் கனடா வாழ் தமிழ் மக்கள் மாத்திரமல்ல எம்மோடு தொடர்புடைய வேற்றின மக்களையும் அழைத்து வந்து அவர்களின் காதுகளிலும் எம்மீது இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட அனைத்து அடக்கு முறைகளையும் படுகொலைகளையும் அதனால் எமது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளையும் அங்கு கோரமாகக் காட்சியளிக்கும் எலும்புக்கூடுகளையும் இதனால் நாம் அனுபவிக்கும் துன்பியல் விடயங்களையும் உலகின் காதுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்”
இவ்வாறு கனடாவில் இயங்கிவரும் BEHIND ME FOUNDATION என்னும் மனித நேய அமைப்பானது எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி ஸ்காபுறோ ALBERT CAMPBELL SQUARE திறந்த வெளி அரங்கில் ஏற்பாடு செய்துள்ள ‘விழித்தெழு தமிழா’ செம்மணி எழுச்சிக் கூட்டம் தொடர்பான விளக்கமளிப்பு சந்திப்பில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கு BEHIND ME FOUNDATION என்னும் மனித நேய அமைப்பின் நிறுவனரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கனேந்திரன் செல்வராஜா அவர்கள் தலைமை தாங்கினார். அங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் TORONTO VOICE OF HUMANITY என்னும் மனித நேய அமைப்பின் தலைவருமான நாகமணி லோகேந்திரலிங்கம் மற்றும் ‘யுகம் வானொலி’ நிலையத்தின் அதிபரும் கலைஞருமான கணபதி ரவீந்திரன் ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருந்து ஏனைய ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அங்கு உரையாற்றிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் உறுப்பினரான லோகன் கணபதி தொடர்ந்து உரையாற்றுகையில் “எமது தாயக மண்ணில் தமிழர்களாகப் பிறந்த ஒரு காரணத்திற்காகவும் நாங்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டு வாழ்கின்கின்றோம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்கின்ற காரணத்தாலும் எமது மக்கள் அந்த மண்ணில் தொடர்ச்சியாக இனவாதத் தாக்குதலுக்கும் பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுத் திணைக்களத்தின் சிப்பாய்கள் ஆகியோரின் அடக்கு முறைகளுக்கும் காரணமற்று கைது செய்யப்படுவதுமான கொடுமைகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனவே இலங்கை அரசினதும் அரச பயங்கரவாத்தினதும் அநியாயங்களை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உண்டு’ என்றார்.
அங்கு தலைமை உரையாற்றிய BEHIND ME FOUNDATION என்னும் மனித நேய அமைப்பின் நிறுவனரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கனேந்திரன் செல்வராஜா அவர்கள் தமது அமைப்பும் அத்துடன் இணைந்து இயங்கிவரும் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை விழித்தெழு தமிழா என்னும் எழுச்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் எந்த அமைப்புக்களில் அங்கம் வ கித்தாலும். எமது மொழிசார்ந்தும் எமது பண்பாடு சார்ந்தும் இந்த எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உலக மக்களுக்கும் எம்மீது அடக்குமுறைகளை தொடர்ச்சியாகத் திணிக்கும் இலங்கையின் இனவாத அரசாங்கங்களின் செயற்பாடுகளை எடுத்துச் செல்லும் கருவிகளான நாம் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் TORONTO VOICE OF HUMANITY என்னும் மனித நேய அமைப்பின் தலைவருமான நாகமணி லோகேந்திரலிங்கம் தனது கருத்துப் பகிர்வின் போது தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கனடிய தேசத்தில் பல அமைப்புக்கள் எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதற்காகவும் இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் கனடாவில் இயங்கிவரும் BEHIND ME FOUNDATION என்னும் மனித நேய அமைப்பானது ஏற்பாடு செய்துள்ள விழித்தெழு தமிழா என்னும் எழுச்சிக் கூட்டத்தில் தமது அமைப்பும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 2009ம் ஆண்டு எமது போராட்டத்தில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் கனடாவில் எந்த ஒரு அமைப்பும் மக்களுக்காக இயங்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்து எமது மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட போது தனது உதயன் பத்திரிகையில் எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் ‘”அப்படி எண்ணுவது தவறு. கனடாவில் தொடர்ச்சியாக மாவீரர் நினைவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மக்களை வழி நடத்துவதற்கும் ‘உலகத் தமிழர் இயக்கம்’ போன்ற அமைப்புக்களின் தேவை இன்னும் உள்ளது’ என்ற கருத்துப்பட எழுதியதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் கனடாவில் இயங்கிவரும் BEHIND ME FOUNDATION என்னும் மனித நேய அமைப்பும் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை விழித்தெழு தமிழா என்னும் எழுச்சிக் கூட்டத்தை நடத்துவது காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அங்கு சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் மேற்படி நால்வரும் பதிலளித்தனர்.
எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை விழித்தெழு தமிழா என்னும் எழுச்சிக் கூட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள 647 532 1190- 416 898 7284 – 647 302 1189 ஆகிய தொலைபேசி இலக்கங்களையும் அழைக்கலாம்.





























