அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டுவந்தது. வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்டும் விற்பனை செய்யப்படுவதனை அறிந்தும், குறைந்தது அம்பன் கிழக்கில் பத்து இலட்சம் கியூப் மணல் மண் அகழப்பட்டு சூழல் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தமது கிராமத்தை தொடர்ந்தும் அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்தது மணல் மண் வழங்க மறுத்திருந்தனர். அதேவளை தொடர்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இதம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம் பெற்றது. மக்கள் எதிர்ப்பினையும் மீறி நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் மண் விநியோகம் இடம்பெறுகிறது.
வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் தனது கிராமத்தில் மணல் மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மீறி தனி நபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் தனி நபர்கள் எவருக்கும் கனியமணல் அகழ்விற்கு அனுமதி வழங்க கூடாது என ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் மீறி தனி நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு திரு.சகாதேவன் அவர்கள் அனுமதி கோரப்பட்டிருந்தது. தனி நபர் ஒருவருக்கு வழங்க முடியாதென பிரதேச செயலகம் அறிவித்துருந்தது. அதனை எதிர்த்து திரு.சகாதேவனால் உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலகத்தால் ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தின் பிரகாரம் தனிநபர் எவருக்கும் மணல்மண் அகழ அனுமதி வழங்கக்கூடாதென மன்றிற்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் தனி நபர் ஒருவருக்க கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
























