தேர்தல் கமிஷன் பாஜகவுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது மற்றும் தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள, உறுதிமொழி பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “நான் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: “தரவுகளை உறுதிமொழி பிரமாணமாக அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. நான் அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன். நான் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தை முடக்கியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மாநில தேர்தல் ஆணைய அலுவலகங்களின் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. தரவுகளின் அடிப்படையில் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினால், அவர்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் குலைந்து போகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.” இவ்வாறு அவர் பேசினார்.






















