ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா தீவிர போர் தொடுத்தது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். இதேபோன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. போரை ரஷியா தீவிரப்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வருகிற 15-ந்தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
























