மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவிப்பு!
“மேற்படி வட்டாரத்தின் முன்னாள் அங்கத்தவர்கள் பலர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகக் கருதுகின்றேன்” எனவும் அறிவிப்பு!
ரொறன்ரொவிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம்
“மிக விரைவில் நடைபெறவுள்ள எமது மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலை நடத்துவதா அல்லது கடந்த தேர்தலில் இரண்டாவது எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கு அந்தப் பதவியை வழங்குவதா என்று தடுமாறிய நிலையில் இருந்த மார்க்க நகரசபையின் தற்போதைய மேயர் மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் நான் உரையாற்றுவதற்கு நேரடியாக அழைக்கப்பெற்றிருந்தேன். அங்கு எனது உரையில் பல விடயங்களை நான் சுட்டிக்காட்டினேன்.இந்த இடைத் தேர்தல் நடத்தப்பெற்றால் தான் மார்க்கம் மாநகரசபையில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதை மக்கள் அறிவார்கள். மேலும் கடந்த தேர்தலில் இரண்டாவது எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பெற்றால் அது அடுத்து வருகின்ற தேர்தலிலும் அவரது வெறறிக்கு சாதகமாக இருக்கும். இந்த முறை ஜனநாயகத்திற்கு மாறானதாகும்.
எனவே தேர்தல் முறைப்படி நடத்தப்பெற வேண்டும் என்று சபை அங்கத்தவர்களுக்கு நேரடியாக வலியுறுத்தியவள் என்றவகையில் நான் பெருமிதம் அடைகின்றேன். நான் வேண்டிக் கொண்ட வகையிலும் எனது வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்ட வகையிலும் தற்போது தேர்தல் நடைபெறுகின்றது. நான் உட்பட பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றோம்.
ஒரு வேட்பாளராக நான் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார வாக்காளப் பெருமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், எனது அனுபவம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்தை நான் கற்றுக் கொண்டவள் என்றவகையில் ஒரு நகரசபையின் கொள்கைகளை தீர்மானிப்பது. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்ற பல விடயங்களில் எனக்குள்ள நீண்ட கால அனுபவத்தை நான் 7ம் வட்டார அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பெற்றால் பயன்படுத்தி இந்த வட்டாரத்தின் மேம்பாட்டுக்காகவும் நன்மைகளுக்காகவும் மக்களின் நலன்களுக்காகவும் அர்ப்பணிப்பேன்”
இவ்வாறு மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா உதயன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேற்படி பேட்டியில் அவர் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில் பல பயனுள்ள விடயங்களையும் தனது அனுபவத்தினால் பெற்ற உயர் கல்வியினாலும் தான் வகித்த பல பதவிகளினாலும் வட்டார மக்களுக்கு சிறந்த சேவைகளை நிச்சயம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் “மேற்படி வட்டாரத்தின் முன்னாள் அங்கத்தவர்களான லோகன் கணபதி அவர்கள் மற்றும் காலிட் உஸ்மான் அவர்கள் ஆகியோர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகவும் கருதுகின்றேன்” எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஒரு நகரசபை அங்கத்தவர்களுக்கு பல பணிகள் உள்ளன. நகரத்தின் பாதுகாப்பு- குற்றச் செயல்களைத் தடுத்தல்- போக்குவரத்து வசதிகள்- பொதுப் போக்குவரத்தின் போது நேரத்தைச் சேமித்தல் போன்ற பல கடமைகளும் பணிகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கவனித்து நகரசபை அங்கத்தவராக நான் ஆற்ற வேண்டிய பல பணிகள் எனக்கு உள்ளன என்பதை நான் உறுதிபட அறிவேன். எனவே எனது இளமைக் காலம் முதல் நான் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவள் என்ற வகையிலும் மக்கள் போராட்டங்களில் முன்வரிசையில் நின்று உழைத்தவள் என்ற வகையிலும் எமது வட்டார மக்களிடம் எனக்குள்ள முழு உரிமையோடும் நான் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தலில் தங்கள் வாக்குகளை எனக்கு அளிக்கும் படியும் இயலுமானால் செப்டம்பர் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ள முன்வாக்குப் பதிவில் பங்குபற்றி தேர்தல் தினத்திற்கு முன்பாகவே எனக்கு தங்கள் வாக்குகளை அளிக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.
Advance voting days- Friday, September 26 to Sunday, September 28, 2025, 10 AM to 8 PM –
Voting day :- Monday, September 29, 2025, 10 AM to 8 PM –
























