(மன்னார் நிருபர்)
(30-11-2020)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கார்மேல் நகர் கிராம மக்கள் குடி நீர் தட்டப்பாட்டினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவாதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கார்மேல் கிராமத்தில் சுமார் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குறித்த குடும்பங்களுக்கு இது வரை உரிய குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
ஆனால் இவர்களது கிராமத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் செல்கிறது.
அந்த குழாயில் ஏற்பட்டுள்ள சிறு துளை வழியாக வரும் நீரை சேமித்து அந்த மக்கள் குடி நீராக பயன்படுத்தும் அவல நிலைக்கு கார்மேல் கிராமத்து மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக தொடரும் இந்த அவல நிலை தொடர்பாக கடந்த வருடம் முசலி பிரதேச சபையில் கலந்துரையாடல் நடை பெற்ற போது அதன் தவிசாளர் கார்மேல் கிராமத்தில் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டால் பௌசர் மூலம் தாங்கிகளுக்கு நீர் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
முசலி பிரதேச செயலகத்தின் சார்பில் அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதீக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிறிய அளவு நீர் தாங்கி 60 குடும்பங்களுக்கும் போதுமானதாக இல்லை. இதனால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.எமது கிராமத்தில் இருந்து குடிநீர் வேறு கிராமங்களுக்கு வழங்கி விட்டு நாங்கள் தாகத்தில் இருக்கின்றோம். நீர் தாங்கிகள் வாங்கும் அளவு எமது அமைப்புகளுக்கோ மக்களிடமோ வசதிகள் இல்லை
.
எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர் தாங்கிகளை பெற்றுத் தந்து கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று முசலி கார்மேல் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.