இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார்
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம். அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக. பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட பகுதி. கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.
மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக. மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .
























