நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் மகன் பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் இந்த விழாவில் அவர் அவர் பேசியதாவது; “தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை சகோதரர் மணி – புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரகதீஸ்வரன், மற்றும் கோவிந்தன் – சுகுணா தம்பதியரின் அருமை மகள் மது பிரதிக்சா ஆகியோரது மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்தி அமர்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், முழுமையான திருத்தப் பணிகள் செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அதற்குக் காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது! அதைத்தான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள்; இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதை தடுத்து நிறுத்தத்தான் நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்றைக்குக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் நடத்திய கூட்டத்திற்கு கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. அதில் பங்கேற்கவில்லை. இன்னும் ஓரிரு கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. தேர்தல் ஆணையத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக நான் உள்ளபடியே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி, இதில்கூட தன்னுடைய இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார். பா.ஜ.க.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்கப் பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில், அ.தி.மு.க. தொண்டர்களுக்காக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கு பத்திரிகைகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். இது எதை காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதைத்தான் அது காட்டுகிறது! ஆனால், அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை. தான், “பா.ஜ.க.,வின் பாதம்தாங்கி பழனிசாமி” என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.
தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார். “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை” எல்லோரிடமும், சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி, இந்த மண்ணில் வாழுகின்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும். கடந்த 1-ந்தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் கூட, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திரருப்பீர்கள் – அதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கே பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு எப்படியெல்லாம் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது – தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் கேட்கிறேன், பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன், 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
























