“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே –
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
– மகாகவி பாரதி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சென்ற தமிழர்களின் உலகளாவிய தாக்கத்தைப் போற்றும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் அயலகத் தமிழர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா எதிர்வரும் (2026) சனவரி 11,12 ஆகிய நாள்களில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளிலிருந்து பங்குபெறும் அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உலகெங்கும் உள்ள சாதனைத் தமிழர்கள் என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இத்திருவிழா மொழி, வரலாறு, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் சங்கமமாகும். கலாச்சாரம், புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு செய்தோருக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் விருதுகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. கடந்த முறை போலவே இந்த முறையும், பேரவை சார்பில் அமெரிக்க வாழ்வியலைப் பற்றிய பல்வேறு தகவல்களுடன் சாவடி ஒன்றும் அமைக்கவுள்ளோம்.
அமெரிக்க வாழ் தமிழர்களான நாம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு இவ்விழாவில் கலந்துகொண்டு, தமிழர் ஒற்றுமையைப் பறைசாற்ற பேரவை சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய https://nrtamils.tn.gov.in/nrtday/register
இறுதி நாள் : Dec-18, 2025
விருதுகளுக்கு விண்ணப்பிக்க https://nrtamils.tn.gov.in/nrtday/awards
























