பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிந்தையில் உதித்த பக்தர் நலன் பயக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் – காசி பயணம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (06-12-2025) காலை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக காசிக்கு 602 பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நாளை இரவு காசி சென்றடையும் இப்பயணிகள் டிசம்பர் 12 அன்று காலை திரும்பி வருவார்கள். இப்பயணிகளின் பாதுகாப்பிற்காக இணை ஆணையர் ஒருவர், 5 உதவி ஆணையர்கள், 45 துறை அலுவலர்கள், 2 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு போர்வை, பற்பசை, தேங்காய் எண்ணெய், தலைவாரும் சீப்பு உட்பட 18 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.27,500 ஆகும். இத்திட்டத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது. ராமேஸ்வரம்-காசி பயணத்தில் இன்று வரை 1,520 பேர் பயனடைந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட ‘ஆன்மீகப் பயணம்’ திட்டத்தில் மொத்தம் 3,815 பேர் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 4 கோடி 64 லட்சம் ரூபாயை மானியம் வழங்கியுள்ளது. ஆடி மாத அம்மன் சுற்றுலா பயணத் திட்டதைச் சீரமைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் 3,004 சக்திகள் பயன்பெற்றனர். இதற்கான 75 லட்சம் ரூபாய் செலவை அரசே ஏற்றுள்ளது. புரட்டாசி மாத வைணவ திருக்கோவில் பயணத்திட்டத்தில் 314 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்திற்கும் 75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, மூத்தோரின் மகிழ்ச்சியிலும் இறைவனைக் காணும் அரசாக நாங்கள் செயல்படுகிறோம். மேலும் முக்திநாத் யாத்திரைக்கான மானியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 645 பக்தர்கள் பயன்பெற்ற இத்திட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மானியம், மானசரோவர் பயண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டு கூடுதலாக 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பயணங்களில் ஒட்டுமொத்தமாக 11,998 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக அரசு ஒதுக்கிய நிதி 11 கோடியே 13 லட்சம் ரூபாயாகும். அ.தி.மு.க.வில் இப்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அத்தனையும் டெல்லியில் இருந்து உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொல்லுகிறாரோ அதற்கேற்ற வகையிலேதான் எடுத்துக் கொடிருக்கின்றார்கள். அவர்கள் கொண்ட கொள்கைகளை அவர்கள் கொண்ட லட்சியங்களைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை பொறுத்தவரை 2014, 2017 ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் அ.தி.மு.க. ஆட்சிதான் இருந்தது. அந்த ஆட்சியில் தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது, அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை பா.ஜ.க.விடம் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
























