”தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வலியுறுத்திய நிலையில் தமிழரசுக்கட்சி அதற்கு நேர்மாறாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளது ”—கே.பாலா
1958ஆம் ஆண்டில் ”வஞ்சி கோட்டை வாலிபன்” என்ற படம் வெளியானது .அந்தப் படத்தில் பத்மினிக்கும், வைஜயந்தி மாலாவுக்குமிடையே நடக்கும் நடனப் போட்டி பாடல் மிகவும் பிரலாபலமானது. இந்தப் பாடலில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் நடனமாடி ஒருவரை ஒருவர் கோபத்துடன் முறைத்துப் பார்த்து, நேருக்கு நேர் நாட்டிய நளினங்களை விதம் விதமாக காண்பித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பார்கள் அப்போது நடிகரும் நாயகர்களில் ஒருவருமான டி. கே. ராமச்சந்திரன் ”சபாஷ் சரியான போட்டி ”என்பார் . “கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே, எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே”என்ற அந்தப்பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது .இன்று அந்தப் பாடலை கேட்டாலும் இனம் புரியாத ஒரு கிளர்ச்சி ஏற்படும்.
உண்மையில் இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் இருவரும் உச்சத்தில் இருந்த நட்சத்திரங்கள். மேலும் நாட்டியத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத நம்பர் 1 ஆக இருந்தவர்கள். எனவே இருபெரும் கலைஞர்களுக்கிடையேயான ஈகோவால் இருவருமே இந்த போட்டிக்கு ஒரே இடத்தில் ஆட மறுத்து விட்டனர் என்பதுதான் உண்மை. இதனால் முதலில் பத்மினி ஆடுவதை படமெடுத்து அதை பிரிண்ட் போட்டு கொண்டுபோய் அன்று மாலையே வைஜயந்திமாலாவுக்கு போட்டு காண்பிப்பார்கள். அதைப் பார்த்து வைஜயந்தி மாலா பதிலுக்கு நடனமாடுவார். அது படமாக்கப்பட்டு பத்மினிக்கு போட்டுக் காண்பிக்கப் படும். இப்படியே மாறி ,மாறி இருவரும் தனித் தனியாக ஆடியதை இறுதியில் இணைத்து இருவரும் ஒன்றாக ஆடியதைப் போல நமக்கு படம் காண்பித்து விட்டனர். எது எப்படியோ தமிழுக்கு ‘’சபாஷ் … சரியான போட்டி” என்ற மறக்க முடியாத புகழ் பெற்ற பஞ்ச் வசனத்தை இந்த பாடல் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டது.
சரி இப்போது இந்த விடயம் இங்கே ஏன் என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.இதற்கும் காரணம் உண்டு.பத்மினி,வைஜயந்திமாலாவுக்கு இடையில் இந்தப்பாடலில் ஏற்பட்ட ”ஈகோ” போட்டி போன்று தற்போது இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, உரிமை, இலங்கை அரசுக்கான அழுத்தம் போன்றவற்றில் இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்துவதில் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் மாகாணசபைத் தேர்தலா சமஷ்டியா என்பதில் பத்மினி, வைஜயந்திமாலா போன்று தனித்தனி நடனப் போட்டி ஏற்பட் டிருப்பதுதான் தமிழ் மக்களுக்குள்ள சாபக்கேடாகவுள்ளது. .
”தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராஜ்ஜிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டுமென தமிழகத் தலைவர்களை வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் கடந்த 17 ஆம் திகதி சென்னைக்கும் பயணமானது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த தமிழகத் தலைவர்களுடனான சந்திப்புக்கான தமிழக விஜயம் தமது அரசியல் இருப்புக்கு மேலும் இடியை இறக்கி விடுமோ என இலங்கை தமிழரசுக் கட்சியினர் அஞ்சிய நிலையில், உடனடியாகவே ”இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளோம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம்அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என தமிழரசுக்கட்சி சார்பானவர்களினால் தகவல்கள் வெளியிடப்பட்டன..
தமிழகம் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி – தமிழ் தேசியப் பேரவை ,தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் .தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம. க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள், தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தி தமிழர்தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்புஉருவாக்கப்பட தமிழகத்தலைவர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதுடன் இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த விஜயம் இலங்கை அரசினாலும் உற்று நோக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தமிழரசுக்கட்சியினரே எதிர்பாராத வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை கடந்த 23 ஆம் திகதி கொழும்பில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொது செயலாளர் சுமந்திரன். சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம்அடைக்கலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென இந்தியா தற்போதைய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற வலியுறுத்தலே தமிழ் அரசியல் தரப்பில் பிரதானமாக இருந்தது.
இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்படாது.அவர் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களை சந்தித்தது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்றவாறாக தமிழரசுகட்சிக்கு சார்பான சிலரால் தகவல்களை வெளியிடப்பட்டன . மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தியத் தூதரகத்தினால் ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சித் தலைவர்களான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தான் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த சந்திப்பில் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு வருகை தர இருக்கின்றார் அவர் மாகாண சபை முறைமையையே ஒழித்து, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆளுநர் மூலம் மாகாணங்களை நிர்வகிப்பது பற்றிப் பேசுகிறார். அவருக்குத் தெளிவான அறிவுறுத்தலை புதுடில்லி வழங்க வேண்டும் என்றவாறாகவும் தமிழ் தேசியக்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது .ஆனால் ரில்வின் சில்வாவின் புதுடில்லி வருகை டித்வா புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுளதாகத் தெரிவித்த ஜெய்சங்கர் மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பிலும் பெரிதாக அக்கறை காட்டிப்பேசவில்லை. தற்போது இலங்கையில் இயற்கைப் பேரனர்த்த பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தற்போதைக்கு இலங்கை அரசுடன் பேச முடியாது என்றவாறாகவே ஜெய்சங்கரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
இந்த சந்திப்பிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமாக ,இந்திய இலங்கை ஒப்பந்தம், தமிழ் மக்களுடையஅரசியல் அபிலாஷைகள், மக்களுடைய அபிலாஷைகளோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மிகத்தெளிவாக வலியுறுத்தி இருக்கின்றது.அந்த அபிலாஷைகள் நடைமுறைப்படுத்தப்படுவது என்ற பெயரிலே இலங்கை அரசாங்கம் 13 ஆம் திருத்தத்தை ஒற்றையாட்சி முறைக்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தின. 13ஆம் திருத்தம் தொடர்பான ஒற்றையாட்சி கட்டமைப்பு சம்பந்தமாக இலங்கை உச்சநீதிமன்றம் மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. அதில்,அதிகாரங்கள் மத்தியில் மட்டும்தான்இருக்கலாமே தவிர மாகாணங்களுக்கோ வேறு எந்தஒரு கட்டமைப்புக்கோ வழங்கப்பட முடியாது என்றுள்ளது.
அந்த வகையிலே மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் தான் 13 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய- இலங்கை ஒப்பந்தம், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளான தமிழ் தேசத்துடைய அங்கீகாரம் ,தமிழ் தேசத்துடைய தனத்துவமான இறைமையின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய – குறிப்பாக, திம்பு கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதான திருத்தங்களை உள்ளடக்கியிருந்தபோதும், அவற்றை ஒற்றையாட்சி முறைக்குள் முடக்கியதால், 13 ஆம் திருத்தம் நிறைவேற்றி 38 வருடங்களின் பின்னரும் தமிழ் மக்கள் எதையும் அனுபவிக்க முடியாமல் உள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நாங்கள் அடைய முடியாமல் இருக்கிறது.
ஆகவே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்ட விடயங்களை நாங்கள் அடைவதாக இருந்தால், அதிலே அடிப்படை மாற்றமொன்று நடைபெறவேண்டும். குறிப்பாக- இலங்கையின் அரசியலமைப்பு ஒரு சமஸ்டி கட்டமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டே ஆக வேண்டும். இல்லாதுவிடின் – இந்த 13ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து 38 வருடங்களாக இந்தியாவும் அதை நடைமுறைப்படுத்த சொல்லி கேட்கின்ற நிலையில், வரும்காலங்களிலும் , நடைமுறைப்படுத்மாறு கோரும் கோரிக்கையையே நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தவிரஅதற்கு அப்பால் எதுவுமே நடக்கப் போவதில்லை என்ற விடயத்தை தெளிவாக ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் காண முடியாது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சரும் ஏற்றுக்கொண்டார் .
அதேவேளை இந்த சந்திப்பிலே கலந்து கொண்ட தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும்மாகாண சபை முறைமையிலே 13ஆம் திருத்தம்நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திரும்பத்திரும்ப கேட்டார்களே தவிர, தங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையான ஒற்றையாட்சி கோட்பாடு நிராகரிப்பையும் சமஷ்டி ஆட்சிமுறைமையையும் அவர்கள் வலியுறுத்தவில்லை.ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண முடியாது என நாங்களும் தெரிவித்தோம். தீர்வு சமஷ்டிக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் அதற்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டாலும் அந்த கட்டமைப்பு சமஷ்டியாக இருக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார் என சுமந்திரன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ தமிழகத் தலைவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி – தமிழ் தேசிய பேரவை சந்தித்திருப்பதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தித்திருப்பதும் ரில்வின் சில்வா தாமதித்தேனும் புதுடெல்லி செல்லும்போது தமிழர் விடயத்தில் இந்திய அழுத்தம் கொடுக்குமென நம்பலாம் .அதேநேரம் தமிழ் தேசிய முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி- ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான இந்த இரு நிலைப்பாட்டு அரசியல் போட்டியை ”சபாஷ் சரியான போட்டி” என்று கூறத் தோன்றினாலும் இந்த ”தனித் தனி நடன ஈகோ” போட்டியினால் தமிழர் தரப்புக்கு ஏதேனும் நன்மைகள் கிடைக்குமா என்பதே கேள்வியாகவுள்ளது.
தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசியத்தின் இரு பிரதான கட்சிகளாக இருப்பதுடன் இந்த இரு பெரும் கட்சிகளுக்கிடையேயான ஈகோவால் இருவருமே ஒரே அணியாக செயற்பட மறுத்து தனித்தனியே தமிழர் தீர்வு உரிமைகளுக்கான சந்திப்புக்களில் இரு வேறு கொள்கைகளுடன் ஈடுபட்டு வருவதே விமர்சிக்கப்படுகின்றது.தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வலியுறுத்தும் நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி-ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அதற்கு நேர்மாறாக மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடத்த அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளது. இதனால் இவ்விரு சந்திப்புகளினாலும் தமிழர்தரப்புக்கு சாதமாக ஏதேனும் நடக்கும் என்பது சந்தேகமே.
























