மரபுத் திங்களை மகிழ்வுடன் கொண்டாட
கரங்கள் கோர்த்தே களத்திலே இணைவோம்
தமிழனின் பெருமையைத் தரணியில் இயம்பியே!
அமிர்தத் தமிழை அரியணை ஏற்றுவோம்
உழவர் திருநாளை உலகறியச் செய்தே!
உழவுத் தொழிலுக்கு உன்னதம் சேர்ப்போம்
பொங்கல் விழாவைப் பொறுப்பாய்ச் செய்தே!
மங்காத் தமிழன் மரபு காப்போம்
முத்தாய் எமக்கு மூத்தோர் தந்த
முத்தமிழும் மூவேந்தர் கதையும் சிலம்பும்
ஆய கலைகள் அறுபத்து நான்கையும்
தேய விடாமல் திடமாய்க் காப்போம்
திருக்குறள் தேவாரம் திருவெம்பா திருக்கோவை
அரும்பெரும் காப்பியம் ஐந்துடன் ஆத்திசூடி
பருப்பொடு சதிபோல் பாலகர் விரும்பி
கருத்தொடு கற்றிடக் களத்தைக் கொடுப்போம.;
பாரம் பரிய பண்பாட்டு விழுமியம்
காரம் குறையாக் கண்ணாய்க் காப்போம்
கிட்டிபுள் கிளித்தட்டு கும்மி கோலாட்டம்
சிட்டான சிறார்க்குச் சிந்தையில் ஏற்றுவோம்
சொக்கட்டான் எட்டுப் பெட்டி சிலம்பம்
கொக்கான் வெட்டுதல் கெந்திப் பிடித்தல்
பொம்ம லாட்டம் போன்ற செயல்களை
செம்மை குறையாமல் செவிகளில் சொல்வோம்
“பொங்கு தமிழுக்குப் பங்கம் விளைந்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு”
பாரதி தாசனின் பாடல் வரிகளை
பாரெலாம் ஒலித்திட பாதை அமைப்போம்
சோர்விலா இனமாய்த் துலக்கம் பெற்றிட
சாரங்கன் தாள்;பணிந்து சபதம் எடுப்போம்
அதிசயிக்கும் அறிவியலை அன்றே கொடுத்த
அதிரசமாய் நாவில் அசைந்திடும் தமிழே!
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த
பச்சைத் தமிழர் பாரினில் நாங்கள்
கதிரோடு ஆடும் கழனி போலவே
சதிராடும் எங்கள் எண்ணத்திற் தமிழே!
அங்கமாய் எம்முள் ஆகிவிட்ட மொழியை
பங்கம் வராமல் பார்த்துக் கொள்வோம்.
அக்கரை நாடிருந்து அகதியாய் வந்தாலும்
இக்கன டாவிலும் தொலைக்கா இனமேநாம்
நன்னெறியை உலகிற்கு நயந்த நற்றமிழே!
என்றும் உன்னுடன் இனிமையாய்ப் பயணிப்போம்;
வாழ்க்கையை வகுத்துக் காட்டிய மொழியை
வீழ்ந்து விடாமல் வீச்சுடன் காப்போம்
எங்களை உலகிற்கு எடுத்துக் காட்டியது
தங்கம் போன்ற தரமான தாய்த்தமிழே.
உலகில் மூத்த மொழியாய் உதிர்த்து
பலரும் போற்றும் பண்பான மொழியெமதே
எங்கள் தாய்மொழி தமிழென இயம்புவோம்
சங்கத் தமிழென சந்ததிக்குச் சொல்வோம்
முத்தாக நாவில் விளையாடும் முத்தமிழை
சொத்தாக எண்ணிச் சரித்திரம் படைப்போம்
நித்திரைப் பொழுதுகள் நெருங்கும் போது
சித்திரக் கதைகளைச் சிறுவர்க்குச் சொல்வோம்
நமக்கென நாடு இல்லாத போதிலும்
தமிழைத் தொலைக்காத் தலைமுறை நாங்கள்
வீழாது ஒருநாளும் எங்கள் வீரத்தமிழ்
வாழ்க தமிழினமே வளர்க தமிழ்;மொழியே!
(எல்லா மொழியும் கற்றுக்கொள்
எம்மொழியில் பற்றுக்கொள்.)
ஆக்கம் பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453
























