நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டில்லி குடியரசு மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் மற்றும் நிர்வாகிகள், பதவிவழி உறுப்பினர்களாகப் பணியாற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரும் உடனிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நிதி ஆயோக்கின் ஆளும் குழுவின் 11வது கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறேன். கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். வளர்ச்சி அடைந்த இந்தியா என்கிற நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கியப் பங்காற்றும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















