இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா நேற்று அதிகாலையில் காலமானார். பாரதிராஜா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர். பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குக்காக பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக பாரதிராஜாவின் உடல்வைக்கப்பட்டது. பாரதிராஜாவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, சொந்த ஊரான காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் மாலை 4 மணியளவில் பாரதிராஜாவில் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. காவல் துறையினர் பேண்ட் வாத்திய இசைக்கப்பட்டு, அணிவகுப்புடன் அவரது உடல், அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அப்போது 72 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.






















