சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்புகள் மீட்கப்பட்டதை அடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில், ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
2025 மே 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 17 ஆம் திகதி வரை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலப்பகுதியில், மூன்று கட்டங்களின் அடிப்படையில், செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 81 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 380 மனித உடல்களுக்கு உரிய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 362 மனித உடல்களுக்கு உரிய முழுமையான அல்லது பகுதியளவிலான எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே, ஜூலை 17 ஆம் திகதியன்று மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 14 பேருக்குச் சொந்தமான எலும்புகள் புதிதாக மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட சுமார் 120 பாவனைப் பொருட்களில், குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மை உட்பட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டன.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி நாட்டின் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ள நிலையில், 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்பட்ட, மன்னார் சதொசா மனிதப் புதைகுழி, தற்போது இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
2013 ஆம் ஆண்டில் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியொன்றில் இருந்து 155 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், அது இலங்கையில் கண்டறியப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படுகிறது.
சுமார் 106 பேருக்குச் சொந்தமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி, இலங்கையின் நான்காவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படுகிறது.
2013 ஆம் ஆண்டிலேயே 82 மனித உடல்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தற்போது ஐந்தாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆறாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியான கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவடைந்தபோது, 52 பேருக்குச் சொந்தமான எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன.
இந்த அனைத்து மனிதப் புதைகுழிகளும் தற்செயலாக கண்டறியப்பட்டவையே தவிர, அரசாங்கத்தின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டவையல்ல.
இலங்கையில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன என்பதனை, கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே, முதன்முறையாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார வெளிப்படுத்தியிருந்தார்.






















