கதிரோட்டம்- 19-06-2026

இலங்கையின் தமிழர் நிலம் பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து சிறப்பாகப் பேசப்பட்டு வந்தது. தமிழ் மன்னர் ஆண்ட வன்னியையும் யாழ்ப்பாணத்தையும் நீர் வளம் கொண்டதாக விளங்கும் வண்ணம் குளங்களையும் கால்வாய்களையும் கட்சினார் எம் மன்னர்கள். தொழில்நுட்ப அறிவு மங்கிக் கிடந்த அந்த காலப்பகுதியில் நீர்ப்பாசன திட்டங்களை நிறுவி நெல்போன்ற பயிர்களை பயன்தரும் வகையில் விவசாயத்தை மேற்கொண்டார்கள். பின்னாளில் பிற நாட்டவர்களால் ஆளப்பட்ட எமது தமிழ் மண்ணில் கல்விக் கூடங்கள் நிறுவப்பட அங்கு கல்வி கற்ற எம்மவர்கள் உயர்கல்வியைப் பெறுவதற்காய் கப்பல் ஏறி கடல் கடந்து கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் தேடியபடி தாயகம் திரும்பினார்.
இவ்வாறான சிறப்புக்கள் பலவற்றைக் கொண்டு செல்வமும் சிவந்த மண்ணும் கொண்ட பிரதேசமாக விளங்கிய எமது தமிழர் தாயகம் சுதந்திரத்திற்குப் பின்னர் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வந்ததனால் எமது சொந்த மண்ணை எமக்கு சொந்தமாக்குவோம் என்ற நோக்குடன் முதலில் அகிம்சை வழிப் போராட்டமும் பின்னர் இளைஞர் அணியினர் ஆரம்பித்த ஆயுத வழி போராட்டம் போன்றவை தென்னிலங்கை இனவாதிகளின் மோசமான அணுகு முறைகள் அரச பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை அவர்களின் கைகளில் எடுக்கச் செய்தன. இதனால் எமது சீரான தமிழினம் சிதறிச் செல்ல நேரிட்டது. ஆயிரக்கணக்கில் எமது மக்களின் உயிர்களை அரச பயங்கரவாதம் ஏந்தி நின்ற ஆயுதங்களால் பறிக்கப்பட்டன.
சி றுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்புகள் மீட்கப்பட்டதை அடுத்து, போரினால். முதலில் கைதுகள் இடம்பெற்று சிறைக்குள் அடைக்கப்படுவதாகவும் விசாரிக்கப்படுவதாகவும் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பட்டாலும், அரச பயங்கரவாதம் கைது செய்த எமது உறவுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு தமிழர் மண் எங்கும் புதைக்கட்டார்கள் என்ற ‘முட்களாய் எம் இதயங்களைக் குத்தும் செய்திகள் சிறிது சிறிதாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
எம் தமிழர் பகுதிகளில் பல இடங்களில் அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புகளும் ஏனைய தடயங்களும் எம்மவர்களை வயது பார்க்காமல் பால் என்று பார்க்காமல் கொரூரமான முறையில் கொலை செய்து புதைத்தது அரச பயங்கரவாதமும், அவ்வப்போது தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தை தங்கைள் கைகளில் எடுத்த ஆட்சியின் தலைவர்களும்தான் என்ற கொடிய தகவல்களையும் தடயங்களையும் எமக்கு தந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில வருடங்களாக என்பிபி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சில இடங்களில் ‘புதைகுழிகள்’ இருப்பதாக சந்தேகிப்பட்ட இடங்களில் அரச நிதிச் செலவுகளோடு அகழாய்வு செய்யப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தமிழ் பேசும் சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருட்கள். கற்கை உபகரணங்கள் என பலவும் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக் கூடுகளோடு சேர்ந்து வருகின்றன. எம் இதயங்களை நொருங்கவும் செய்கின்றன.
இந்த வரிசையில் செம்மணி புகைகுழி பாதிக்கப்பட்ட வட பகுதியில், ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டு தற்பொழுது நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
2025 மே 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 17 ஆம் திகதி வரை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலப்பகுதியில், மூன்று கட்டங்களின் அடிப்படையில், செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 81 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 380 மனித உடல்களுக்கு உரிய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 362 மனித உடல்களுக்கு உரிய முழுமையான அல்லது பகுதியளவிலான எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே, ஜூலை 17 ஆம் திகதியன்று மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 14 பேருக்குச் சொந்தமான எலும்புகள் புதிதாக மீட்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்திலும் எம் தமிழர் மண்ணில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் புதை குழிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவு – வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்றும் அவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“எங்களுடைய தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவுகளை இலங்கை அரசினுடைய ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே வந்திருக்கின்றார்கள். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக் குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகால் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி வெளிச்சத்துக்கு வரும்.
இதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை. தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, ‘ஸ்கேன்’ செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து அறிய முடியும்.
இதேபோல், கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் இருக்கின்ற பல இடங்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் இன்றும் பலத்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.
அரச பயங்கரவாதத்தின் திட்டமிடலின்படி ஏற்படுத்தப்பட்ட புதைகுழிகளில் இலங்கையில் மிகப்பெரிய தளமாக மாறியுள்ள எம்மண்ணின் ‘செம்மணி’ எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் பரவலான அச்சமும் பாரிய சந்தேகமும் என்று செம்மணி புதைகுழி தொடர்பான விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்பட்டு வரும் சட்டத்தரணி நிரஞ்சன் அவர்கள் தனது அறிக்கையொன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து யூன் 17ம் திகதி வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கையில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தப் புதைகுழியாக மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழியே முதலிடத்தில் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் நோக்கினால், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையின் படி, செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையின் இரண்டாவது பெரிய அகழ்வுத் தளமாகவே தற்சமயம் காணப்படுகின்றது.
இவ்வாறான அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் காட்டும் விடயங்கள் பல வருடங்களுக்குப் பின்னர் எமக்கு முன்னால் காட்டப்படுகின்றமை மிகவும் கொடுமையானது என்பதை நாம் உணர்கின்ற இந்த நேரத்தில் சர்ச்சைகளுக்கு’ உள்ளாகியுள்ள திருகோணமலை கடற்படை ‘கன்சைட்’ சித்திரவதை முகாமிற்கு நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் நேரில் சென்று பார்லையிட்டார் என்ற செய்தியும் எமது மக்களுக்கு கிட்டியுள்ளது
திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் கடந்த புதன்கிழமை 17ம் திகதி (17-06-2026 ) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விசாரணையின்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார். மேலும், விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தின் காணொளிப் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறான பல விடயங்களும் தொடர் நடவடிக்கைகளும் அரசாங்கம் சார்பாகவும் நீதித்துறை சார்பாகவும் மேற்கொள்ளப்பட்டாலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கேயோ ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற நம்பிக்கையில் வருடங்கள் பலவாக காத்திருக்கும் அவர்களது உறவுகளுக்கு இப்போது இருந்த நம்பிக்கைகள் தளர்ந்து போகலாம். அவ்வாறாயின் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கும் தவறுகளுக்கும் இலங்கையின் எந்த ஜனாதிபதியோ அன்றி எந்த அமைச்சரோ அன்றி எமது மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தமிழ் மக்கள் பிரதிநிதிகளில் எவரோ பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நியாயத்தை நாம் இவ்வாரக் கதிரோட்டத்தில் பதிவு செய்கின்றோம்!





















