60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்பு கொள்ளாவிட்டால், அதன்பின்னர் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா சுங்க கட்.டணம் வசூலிக்கும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியதுடன், கப்பல்களுக்கு வரி விதிக்கவும் முடிவு செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இதனால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல நாடுகளில் விலைவாசி உயர்வும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி மற்றும் எண்ணெய் அதிகாரிகளை இன்று சந்தித்து பேசவுள்ளார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்பு கொள்ளாவிட்டால், அதன்பின்னர் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா சுங்க கட்டணம் வசூலிக்கும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.






















