ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தர்மன்’ (தலைவர் 173) திரைப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உடன் இணைந்து நடிப்பதில் பெருமகிழ்ச்சியாக உள்ளதென நடிகை சிம்ரன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தர்மன் படத்தை தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்த் ஜோடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் நடிக்க உள்ளார். இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு ‘தர்மன்’ படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘தர்மன்’ (தலைவர் 173) திரைப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழாவில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு பேசியதாவது: “ரஜினிகாந்த் சாருடன் ‘பேட்ட’ படத்தில் நடித்தேன். அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை இருந்தது. அந்த வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன்”. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். ‘தர்மன்’ திரைப்படம் திரையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.






















