சீனாவில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 தொழிலாளர்கள் மூச்சுத்திணறிப் பலியாகினர். சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரில் செயல்பட்டு வரும் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று மதியம் கட்டிடத்தின் தரைத்தளத்தில் காலணிகள் தயாரிப்பதற்கான ரப்பர் மற்றும் கெமிக்கல் பசைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பற்றியுள்ளது. பின்னர் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. உள்ளே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு நோக்கி ஓடினர். ஆனால், தீ மற்றும் புகை மிக வேகமாகப் பரவியதால் அவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் 28 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ரப்பர் மற்றும் கெமிக்கல் பசைகள் எரிந்ததால் காற்றில் கடுமையான நச்சுப் புகையும் துர்நாற்றமும் பரவியது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், அங்கிருந்த உள்ளூர் மக்களுக்கும் கண்களில் கடுமையான எரிச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள காட்சிகளில், பல மாடிகளைக் கொண்ட அந்தத் தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிவதும், வான்நோக்கிப் பெருமளவில் கரும்புகை சூழ்ந்துள்ளதும் காணப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் நகரம் காலணிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள ஆடை மற்றும் காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த காலணிகளில் சுமார் 20 சதவீதம் ஜின்ஜியாங் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தக் கோர விபத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


















