அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO – USA) நிறுவனமும் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளது
பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில், 2026 ஜூலை 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், ஹட்டன் சீடா கல்வி அபிவிருத்தி வளநிலையத்தில், மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள தரம் 1AB பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணியாற்றும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான மூன்று நாள் ரோபோடிக்ஸ் செயன்முறைப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி செந்தில் வதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 14 பெருந்தோட்டப் பாடசாலைகள் பங்கேற்றன. 42 ஆசிரியர்கள் முழுமையான ரோபோடிக்ஸ் பயிற்சியைப் பெற்றனர். மேலும், பங்கேற்ற ஒவ்வொரு பாடசாலைக்கும் ரோபோடிக்ஸ் கழகங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆரம்பகட்ட உபகரணங்களும் இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டன.
இன்றைய உலகில் ரோபோடிக்ஸ் கல்வி, மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனை, பிரச்சினைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் முக்கிய கருவியாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் பிரதான அனுசரணையாளர்களாக கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பிரிவு, Ratnam Foundation (UK) மற்றும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO – USA) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன.
மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் எதிர்காலத்தில் பெருந்தோட்டத் துறைசார்ந்த ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்த்து, உலகத் தரத்திலான புத்தாக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் தலைமுறையை உருவாக்குவதற்கு இத்திட்டம் உறுதுணையாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


















