கனடாவில் இயங்கிவரும் -கல்முனை பிராந்திய இணையத்தின் கோடை கால ஒன்றுகூடல் , சமூக உறவை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது.
கடந்த 11-07-2026 அன்று சனிக்கிழமை மார்க்கம் மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள மெலிகன் (Milliken) பூங்காவில் நடைபெற்ற மேற்படி கல்முனை பிராந்திய இணையத்தின் மாபெரும் ஒன்றுகூடலில் பெருமளவு மக்கள் கலந்து அன்றைய பொழுதை இனிதாகவும் நட்புறவை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் நடத்திய அமைப்பினரை அனைவரும் பாராட்டிச் சென்றனர்.
இந்நிகழ்வு, இணையத்தின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நோ. விஜயரட்ணம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது. நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்காக இணையத்தின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து பணியாற்றினர்.
எண்ணூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இவ்விழாவில், கல்முனை பிராந்திய மக்களுடன் இணைந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் உறவுகளும் பங்கேற்றனர். அத்துடன் நண்பர்கள் பலரும்ய அங்கு கலந்து கொண்டு சமூக ஒற்றுமை மற்றும் உறவுப் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் மேற்படி ஒன்றுகூடல் அமைந்திருந்தது.
காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், காலை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட விருந்துபசாரங்கள் உட்பட அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் பங்கேற்றனர்.இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமான சூழலில் நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் தொடக்கத்தில் கனேடிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மரியாதையுடன் அனைவரும் ஒன்றிணைந்து பாடினர். அதனைத் தொடர்ந்து, கனடா நாட்டின் தேசியக் கொடியை வல்லிபுரம் பரமானந்தராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
கல்முனை பிராந்திய இணையத்தின் கொடியை வைரமுத்து அனந்தலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் நந்தகுமார் அவர்கள், இணையத்தின் இயக்குநர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரீ அவர்கள், மன்றத்தின் செயலாளர் திரு. பத்மநாதன், திரு. கோபி, திரு. கிஷாந்த் மற்றும் பலர் எமது மன்ற உறுப்பினர்களும் இணைந்து கலந்து கொண்டு, கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தனர். இந்த கண்ணியமான நிகழ்வு விழாவிற்கு மேலும் சிறப்பையும் பிராந்திய உணர்வையும் சமூக ஒற்றுமையையும் இணைக்கும் இடமாக விளங்கியது
இந்நிகழ்வின் போது, எதிர்காலத்தில் தமிழ் சமூக கலாச்சார மண்டபம் அமைக்கும் நோக்கத்திற்காக $10,000 நிதியுதவியை தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள், தமிழ்ச் சமூக மையத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரமணன் அவர்களிடம் அங்கத்தவர்கள் பல இணைந்து நிற்க உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிதி சமூக உறுப்பினர்களின் பங்களிப்பால் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் இணையத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
























