காவேரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவேரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். உச்சநீதிமன்றம் காவேரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவேரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடக அரசு, காவேரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவேரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 டிஎம்சி நீர். 20 நாட்களில் சுமார் 21 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவேரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 டிஎம்சி நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் தமிக வெற்றி கழக அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22-ஆம் தேதி காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவேரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை தமிழக வெற்றி கழகம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.”


















