தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெரியகருப்பன் திரும்ப பெற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்ப வேண்டிய தபால் வாக்குகள் மாறாக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறி பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஆணை பிறப்பித்தது. இதற்கிடையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்று அவர்களது தரப்பு வழக்கை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை ரத்து செய்ய முடியாது. இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். அங்கிருக்கும் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நீக்கம் செய்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். தற்போது வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முறைப்படியான ‘தேர்தல் வழக்கு’ தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முந்தைய மனுவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.


















