ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் ஏ.வி.பி.சினிமாஸ் புகழ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார். பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற நாடகத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை நாடக ஆசிரியர் சகாப்தன் எழுதியுள்ளார். திரைப்பட வடிவத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் முழுநீள திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சகாப்தன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் மதிவாசன். இவர் கனடாவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகரும் ஆவார். கதையின் கரு: கனடாவில் விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருக்கும் தனது கணவரை ஆறு ஆண்டுகளாகப் பராமரித்து வருவதோடு, ஆறு வயது மகளையும் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்த்து, கல்வி கற்பித்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையே இப்படத்தின் மையக்கரு. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தவறான பார்வைகளையும், வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதையே படம் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது. ஒரு பெண் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவளது துயரங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் படைப்பாக இது உருவாகி உள்ளது.
















