வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது கடமை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 திகதி இடம்பெறவுள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்குக் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துவரும் மாநாடு தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் யாழ் டில்கோ விடுதியில் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், எமது மண்ணில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிவேண்டி நாம் போராடிவருகின்றோம். அப் போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் சர்வதேச அளவில் எமது போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் அதேவேளை நீதிகோரிய போராட்டத்தினை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தியாகமாகவுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படுவது என்பது சர்வதேச அளவில் மிகவும் கொடூரமான மனித உரிமை மீறலாகக் காணப்படுகின்றது. இலங்கையினைப் பொருத்தளவில் அரச இயந்திரம் ஆயிரக்கண தமிழர்களை வலிந்து காணாமலாக்கியுள்ளது. இதற்கு ஏராளமான சட்டரீதியிலான மற்றும் சாட்சிய ரீதியிலான ஆதாரங்கள் உள்ளன. ஆட்சி மாற்றங்கள் காலத்திற்குக் காலம் ஏற்பட்டபோதும் மாறிமாறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்கள் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதியை வழங்கவில்லை. காணாமலாக்கப்பட்டோர் என்று யாரும் இல்லை என்று கூட பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கங்கள் கூறியிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். இப்போது ஆட்சியில் உள்ளவர்களும் காணாமல் போனோர் விடயத்தில் காலத்தினை கடத்துகின்றனரே தவிர ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
சர்வதேச அளவில் உள்நாட்டுப் பொறிமுறைவாயிலாக தீர்வை முன்வைப்பதாக அரசாங்கங்கள் கூறிவருகின்றன. வலிந்து காணாமலாக்கப்படுவதன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமைக் குற்றத்தினை மறைப்பதற்காக அரச பலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசு பணியாற்றிக்கொண்டிருக்கின்றது. திரட்டப்பட்டு வெளிவிவகார அமைச்சு வாயிலாகவும் இராஜதந்திரிகள் வாயிலாகவும் இது நிகழ்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களே தமக்காக மீளவும் மீளவும் குரல்கொடுக்கவும் போராடவும் வேண்டியுள்ளமை மிகவும் வேதனையானது.
இந் நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவுசார் போராட்ட முறைமைகளையும் உட்புகுத்துபவர்களாக மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க மேலுமொரு போராட்ட அணுகுமுறையாகும். அறிவார்ந்த உத்தியுமாகும். இவ்வாறான விடயங்களுக்கு நாம் தேசமாக ஒன்று திரண்டு துணை நிற்போம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.















