கழகத்தின் வெளியீடான ‘கவிச்சரம்’ வெளியீட்டு விழாவில் தலைவர் ‘மாவிலிமைந்தன்’ சண்முகராஜா புகழாரம்
” கனடாவில் முதன்முதலாக கவிதை இலக்கண வகுப்புக்களை ஆரம்பித்து இன்று 15வருடங்களை எட்டியுள்ள எமது கனடா தமிழ்க் கவிஞர் கழகமானது எண்ணற்ற மரபுக்கவிஞர்களை இந்த மண்ணில் மாத்திரமல்ல வேறு நாடுகளிலும் உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் குறைந்தளவு அங்கத்தவர்களைக் கொண்டதாக விளங்கிய எமது கழகம் தற்போது இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களை உள்வாங்கி அவர்களும் ஆர்வத்துடன் மரபுக் கவிதைகளை வடிப்பது எப்படி என்பதை மரபுக் கவிதை வகுப்புக்களில் கற்றுவருகின்றார்கள். அவர்கள் அனைவரும் தங்களை தரமான மரபுக்கவிஞர்களாக உயர்த்திக் கொள்ளும் கடினமான பணியைச் சுமந்தவர்களாக இருந்து அத்துடன் எமது கவிஞர் கழகத்தின் வளர்ச்சியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறான கவிஞர் பெருமக்கள் நாம் வாழும் புலம்பெயர்ந்த நாடான கனடாவில் தரமானதோர் தமிழிலக்கியப் பணியை ஆற்றியும் வருகின்றார்கள் என்பதையும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன். அது என்னவென்றால், சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியை பேணுவதில் எமது கனடாக் கவிஞர் கழகத்தின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்.
இவ்வாறானவர்களின் ஆற்றல் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து செல்வதால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுத்தமானதும் எவ்விதமான வழுக்களும் அற்ற மரபுக்கவிதைகளைப் படைத்து தற்கால தமிழ் இலக்கிய உலகிற்கு அரிய பணியை ஆற்றுவதோடு தமிழ்க் க்விதை உலகிற்கும் அழகிய கவிதைகளைப் படைக்கும் சிற்பிகளாக விளங்குகின்றார்கள். எனவே அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு எமது கனடா தமிழ்க் கவிஞர் கழகத்தின் வளர்ச்சியில் ஆர்வத்தோடு உழைத்து வரும் பெரியோர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் கவிதைச் சுவைஞர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்”
இவ்வாறு கடந்த 26-07-2026 அன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ்க் கவிஞர் கழகத்தின் வெளியீடான ‘கவிச்சரம்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தலைமைஉரையாற்றிய ‘மாவிலிமைந்தன்’ சண்முகராஜாஅவர்கள் புகழாரம் சூட்டும் வார்த்தைகளை சபையினரோடு பகிர்ந்து கொண்டார்.
விழாவை ஆரம்பத்தில் தொடக்கிவைக்கும் பணியை கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொருளாரரும் விரிவுரையாளருமான குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்று சிறப்பாக நகர்த்திச் சென்றார்.
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கலைநிகழ்ச்சிகள்-கவிதைகளை அரங்கேற்றுதல்- சிறப்பான உரைகள்- வாழ்த்துப் பாக்கள்- நூல்வௌியீடு- ‘கவிச்சரம்’ பற்றிய ஆய்வுரை மற்றும் வெளியீட்டு உரை போன்ற தொய்வில்லாத அம்சங்கள் விழாவை அழகிய முறையில் நகர்த்திச் சென்றன என்றால் அது மிகையாகாது.
‘கவிச்சரம்’ கவிதைத் தொகுப்பு தொடர்பான ஆய்வுரையை முனைவர் வாசுகி நகுலராஜா அவர்களும் வெளியீட்டு உரையை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் சிறப்பான முறையிலும் சபையோரை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஆற்றினார்கள்.
அங்கு தங்கள் கவிதைகளை வாசித்து சபையோரை உற்சாகப்படுத்திய கவிஞர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மரபுக் கவிதை வகுப்புக்களில் பங்கெடுத்து வருகின்றார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து கவிதைகளும் இலக்கணச் சுத்தமாக அமைந்திருந்ததோடு சந்தமும் சொல்வீச்சுக்களும் நிறைந்தவையாக இருந்தன என்பதும் ‘கவிச்சரம்’ கவிதைத் தொகுப்பில் அடங்கியும் அனைத்துக் கவிதைகளும் அந்தத் தரத்தை எட்டியிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.























