தனது பாதுகாப்பில் உள்ள கைதிகள் கொலை செய்யப்படும்போது, அவர்களுக்காக நீதியைக் கோரும் குரலின் உரப்பானது, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது!
அரசொன்றின் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் படுகொலை செய்யப்படும்போது, அவர்களுக்கு நீதி கோரும் குரலின் உரப்பு, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் இலங்கையின் கசப்பான உண்மை. தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டபோதெல்லாம் மௌனத்தையே ஆயுதமாக ஏந்திய அன்றைய எதிர்க்கட்சிகள், சிங்களக் கைதிகளின் மரணத்தின்போது மட்டும் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து மனித உரிமைகள் என குரல் எழுப்புவது ஏன்? பாலா எழுதுகின்றார்
தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோது, அன்றைய நீதி அமைச்சர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கத் தவறிய சிங்கள எதிர்க்கட்சிகள்; இன்று சிங்களக் கைதிகளின் மரணத்தின்போது மட்டும் தற்போதைய நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்துள்ளன. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதியும், இனம் சார்ந்த மனித உரிமை அக்கறையும் இலங்கை அரசியலின் இனவாத முகத்தை முகத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இலங்கையின் பாராளுமன்றத்தில், பிரதமர்கள், சபாநாயகர்கள், மற்றும் சுகாதாரம், மின்சக்தி, சுற்றுலா போன்ற பிற துறை அமைச்சர்களுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புகள் நடந்து அவை தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக நீதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக எதிர்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கடந்த 24 ஆம் திகதி எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே விவாதத்திற்கு எடுக்கப்பட்ட நிலையில் 116 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக36வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 152வாக்குகள் அளிக்கப்பட்ட தாலேயே 116 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன் போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கடந்த 24 ஆம் திகதி எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரதான கேள்வியை எழுப்பியுள்ளது அதாவது இலங்கை சிறைகளில் தமிழர்கள் படுகொலைசெய்யப்படும் போது தமது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றும் நீதி அமைச்சர்கள் சிறைகளில் சிங்களவர்கள் கொல்லப்படும்போது மட்டும்தானா பொறுப்பை நிறைவேற்றாமல் செயற்படுகின்றார்களா என்பதே அந்தக் கேள்வி .
2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்தனர் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிங்களவர்கள். இந்த சம்பவம் தொடர்பிலேயே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
கொழும்பில் 1983 ஜூலை 24 ஆம் திகதி தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர் படுகொலை செய்யப்பட்டனர் .இதன்போது 25 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெலிக்கடை அதியுயர் பாதுகாப்பு சிறையிலிருந்த சிங்களக் கைதிகள், சிறைக்காவலர்களின் துணையோடு தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை நடத்தி தமிழ் மக்களின் போராட்ட இயக்கங்களின் தலைவர்களாகவிருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்ப 53 தமிழர்களை கொடூரமாகக் கொன்றனர் . அப்போதைய ஆட்சியாளர் ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா .நீதி அமைச்சர் நிஸ்ஸங்க விஜயரத்ன.
12- 12- 1997 இல் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் சிங்களக்கைதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களே தமிழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த வார்ட் D சிறையின் கதவை சிங்களக்கைதிகளுக்கு திறந்து விட்டு உதவினர். அப்போதைய ஆட்சியாளர் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க .நீதி அமைச்சர் ஜி. எல். பீரிஸ்
25-10 – 2000 அன்று மத்திய மாகாணத்தில் பண்டாரவளையில் இருந்த பிந்துனுவெவ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 27 பேர் சிங்களக் காடையர் கும்பலினால் வெட்டியும் குத்தியும் அடித்தும் எரித்தும் படு கொலைசெய்யப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.அப்போதைய ஆட்சியாளர் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்க.நீதி அமைச்சர் ஜி. எல். பீரிஸ்.
ஆக .வெலிக்கடை, களுத்துறை, பிந்துனுவெவ சிறைகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அப்போது நீதி அமைச்சர்களாகவிருந்த நிஸ்ஸங்க விஜயரத்ன,ஜி. எல். பீரிஸ் ஆகியோருக்கு எதிராக தமிழ் கைதிகளைப் பாதுகாக்காது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறி விட்டனர் என்று குற்றம்சாட்டி அப்போதைய எதிர்கட்சிகளாகவிருந்த யாருமே நமிபிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவரவில்லை. இதில் 1983 வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ்க்கைதிகள் படுகொலைசெய்யப்பட்டபோது பிரதமராகவிருந்தவர் ரணசிங்க பிரேமதாச .இவர் தற்போதைய நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவின் தந்தையாவார்.
இத்தனைக்கும் வெலிக்கடை, களுத்துறை, பிந்துனுவெவ சிறைகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் போதைப்பொருள் குற்றங்களிலோ .பாதாள உலகக்குழு செயற்பாடுகளிலோ ஈடுபட்டவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்காக உரிமைகள் கோரிப் போராடியவர்கள். ஆனால் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகள் போதைப்பொருள் குற்றங்களில்,பாதாள உலகக்குழு செயற்பாடுகளிள் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள்.
இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் வெறும் சட்ட ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்ல. அவை நாட்டின் அரசியல் காய்நகர்த்தல்களோடும் இனரீதியான பாகுபாடுகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன என்பதையே தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காராவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப்பிரேரணை தெளிவுபடுத்துகின்றது .
தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டபோது மௌனம் காத்த சிங்கள எதிர்க்கட்சிகள், சிங்களக் கைதிகளின் மரணத்தின் போது மட்டும் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தமையானது அவர்களின் நீதிக்கான குரல் ‘இன ரீதியானது’ என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
அரசொன்றின் காவலின்கீழ் உள்ள மனிதர்களின் உயிர்களுக்குக்கூட இனம் பார்த்து மதிப்புக்கூட்டும் இந்த இரட்டை நிலைப்பாடு, நாட்டின் ஜனநாயகம் எந்தளவுக்குப் பலவீனமாக உள்ளது என்பதற்குச் சிறந்த சான்றாகும். தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத எதிர்க்கட்சிகள், சிங்களக் கைதிகளின் மரணத்தின்போது மட்டும் காட்டிய இந்த அவசரம் மற்றும் ஆக்ரோஷம் நீதிக்கான தேடல் அல்ல. அது அப்பட்டமான இனவாத அரசியல் காய்நகர்த்தலே.
















