லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லைபீரியா. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டசன் நகரில் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஆயிரத்து 200 கிலோ கொக்கையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி ஆகும். லைபீரியா வரலாற்றில் ஒரேநேரத்தில் இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை காவல்துறை தீ வைத்து எரித்து அழித்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
















