திருக்கரைசையம்பதி, திருகோணமலை
திருமதி. வசந்தா நடராசன் B.A.,
தலபுராணம் என்பது வரலாற்றிற்குச் சமமானதாகக் கருதக்கூடிய பல விடயங்களைத் தன்னகத்தே அடக்கிக் காணப்படும். ஆலயத்தின் அமைவு, ஆலயத்தின் சிறப்பு, ஆலயம் சார்ந்த நிலப்பரப்பு, அந்நிலப்பரப்பிலே வாழ்ந்த மக்களின் பண்பாடு, நாகரீகம், போன்ற பல விடயங்களைத் தலபுராணங்கள் தன்னகத்தே கொண்டு காணப்படும். இத்தலபுராணங்களை கற்றறிந்த சான்றோர்கள் இயற்றுவதால் அவற்றிலே தெளிவு காணப்படும்.
திருமங்கலாய் சிவன்கோவில் என்ன காரணத்தாலோ அழிவுற்றபோதிலும், இவ்வாலயத்தின் ஆரம்பமும், அதன் சிறப்பும் இவ்வாலய தலபுராணமாகிய திருக்கரைசைப் புராணத்தின் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். புராணம் என்றால் கட்டுக்கதை என்ற கருத்து மக்களிடையே நிலவுகின்றது. இக் கருத்து தவறானதாகும். புராணம் என்பது புராதனமானது. தொன்மையானது என்ற கருத்துடையது.
வரலாறு உள்ளதை உள்ளபடி உரைக்கும்போது, புராணங்கள் வரலாற்றோடு வர்ணனைகளையும் சேர்த்து சேர்த்துக்கூறுவதால், மக்களிடையே இவ்வாறான எண்ணம் தோன்றியிருக்கலாம். இவ்வாறான தலபுராணங்களைப் பேணிக்காப்பது, சைவமக்களுடைய ஆதி வாழ்விடங்களையும், அவர்கள் பேணி வளர்த்த ஆலயங்களையும் அதன் சிறப்புக்களையும் அறிய வாய்ப்பளிக்கும்.
திருமங்கலாய் சிவன்கோவிலுக்குரிய திருக்கரசைப்புராணம், கொட்டியாபுரப்பற்றிலுள்ள பல ஆலயங்களிலே இன்றும் படிக்கப்பட்டு வருகின்றது.
திருமங்கலாய் சிவன்கோவில் தலபுராணக் குறிப்புக்களிலிருந்து திருமங்கலாய் சுவாமி பெயர் கந்தலிங்கேஸ்வரர் என அறியமுடிகின்றது.. இவ்வாலயத்திலே முக்கியமான இரு தீர்த்த தினங்கள் காணப்பட்டுள்ளன. திருமங்கலாய் சிவன் கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருளி, மகாவலிகங்கையில் ஆடி அமாவாசை அன்றும், மகரமாதத்திலும் தீர்த்தமாடுவார். இவ்வாலயம் அழிவுற்றபின்னர் இந்த வழமையின்படி கங்குவேலி சிவனும், தம்பலகாமம் கோணேசரும் மகாவலி கங்கையிலே தீர்த்தமாடுவது வழக்கம்.
திருமங்கலாய் சிவன்கோவிலுக்குரிய திருக்கரைசைப் புராணம் இவ்வாலயத்தின் தொன்மையையும், சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றது. இலங்கையின் கிழக்குப் பிரதேசங்களிலே தமிழ் மன்னர்கள் பன்னெடுங் காலமாத்திற்கு முன்பே அரசாட்சி செய்துள்ளார்கள் என்ற செய்தியை திருக்கரசைப் புராணம் கூறுகின்றது. அக்காலத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் மன்னர்களும், யாத்திரிகர்களும், வியாபாரிகளும் சர்வசாதாரணமாகச் வருவதும் போவதும் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவிலிருந்து மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிங்கபூதரன் என்பவன், அயோத்தியிலிருந்து இலங்கைக்கு வந்தான். தற்போது இலங்கைத்துறை என்று சொல்லப்படும் இடத்தில் கப்பலில் வந்திறங்கினான். அப்போது இப்பிரதேசத்தை எழில்வேந்தன் என்னும் அரசன் ஆண்டுகொண்டிருந்தான். இவனுடைய மகள் பெயர் திருமங்கை. திருமங்கையை சிங்கபூதரன் திருமணம் செய்து, எழில்வேந்தனுக்குப் பின், திருக்கரைசையம்பதியில் அரண்மனை அமைத்து ஆட்சி செய்துள்ளான். அரண்மனை அமைத்த இடத்திற்கு இரணியன்குன்று என்று பெயர்.
இப்பெயர் திரிபுபட்டு இரணியன் கொட்டு என்று வழங்கப்படுகின்றது. சிங்கபூதரனும், திருமங்கையும் சோந்து அமைத்த கோவிலே திருமங்கலாய் சிவன்கோவில் என்று வழங்கபப்ட்டது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையே பொருந்திச் சிறந்து விளங்கிய திருமங்கலாய் சிவன்கோவில், மகாவலிகங்கையின் பெருவெள்ளப் பெருக்கினால் அழிந்திருக்கலாம் என்றும், பின்னர் காடுவளர்ந்து மூடியிருக்கலாமென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. இவ்வாறு காடு வளாந்து மூடியிருந்த காலத்தில், ஸ்ரீ தியாகராசக் குருக்கள் என்பவர், ஆலயத்திலிருந்த லிங்கத்தையும், அம்பாளையும் எடுத்துவந்து வெருகலம்பதியில் ஒரு சிறு கோவில்கட்டி வணங்கி வந்துள்ளார்.
இக்கோவிலும் பராமரிப்பாரின்றி அழிவுற்றிநிலையில், இந்தத் திருவுருவங்கள் மூதூரிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றடி உயரமான லிங்கமும், அம்பாளும் சிறிது பின்னப்பட்டிருந்தபோதிலும், மிக அழகிய திருவுருவங்களாகக் காணப்படுகின்றன. திருமங்கலாய் ஆலயத்திற்குரிய மணியொன்று கங்குவேலிச் சிவன் கோவிலில் இருக்கின்றது.
வரலாற்றுப் பெருமைமிக்க இவ்வாலயம், பழுதடைந்து காணப்படுகின்றது. ஆயினும் ஆலயச் சிதைவுகளைத் தேடியெடுத்து ஒழுங்குபடுத்திப் பாதுகாத்த பெருமை திரு.க.செல்லத்துரை சாமியாரைச் சார்ந்ததாகும். ஒரு காலத்தில் வரலாறு மீண்டு தமிழ்மக்கள் கோலோச்சும் காலத்தில், வரலாற்றுப் பெருமைமிக்க ஆலயங்கள் யாவும் தமது உன்னத நிலையை மீண்டும் பெறும் வாய்ப்பு ஏற்படும். ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதற்கிணங்க, ‘குடைநிழல் இருந்து குஞ்சரமூர்ந்தோர் நடைமெலிந்து நண்ணினும் நண்ணுவர்’ என்பதை மனதிருத்தி, எமது வரலாறு மீண்டும் எழுச்சிபெற்று, அதன் மூலம் தமிழ் மக்கள் வாழ்வும், அவர்கள் போற்றிப் பேணும் ஆலயங்களும் புதுப்பொலிவு பெறும். இது காலத்தின் நியதி என்பதை மனதிருத்திருத்துவதே பொருத்தமுடையது.
வளரும்…
















