அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவுகளில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அங்கேயே குழந்தை பிறக்கும் பட்சத்தில், இயல்பாகவே அந்த குழந்தைக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்துவிடும். இது போன்ற சட்டங்கள் சில நாடுகளில் அமலில் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டத்தை பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல் சென்று அங்கு குழந்தையை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட நாட்டின் குடியுரிமையை பெறுவது ‘பிறப்பு சுற்றுலா’என்று அழைக்கப்படுகிறது. சிறப்பான கல்வி, மருத்துவம், மேம்பட்ட வாழ்க்கை சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கத்திய நாடுகளில் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இவ்வாறு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் அந்த நாட்டின் சொந்த குடிமக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அமெரிக்காவின் ‘மைக்ரேஷன் பாலிசி இன்ஸ்டிடியூட்’ வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டில் ஆண்டுதோறும் 22,000 முதல் 26,000 குழந்தைகள் ‘பிறப்பு சுற்றுலா’ மூலம் பிறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்பு அமெரிக்காவில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கருப்பின மக்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக 1868-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தம் மூலம், முன்னாள் அடிமைகள் உள்பட அமெரிக்காவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. இதனிடையே, அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு சமீபத்தில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் உத்தரவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. இது குறித்து பேசிய டிரம்ப், “அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த மக்களின் குழந்தைகளுக்காக பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது? இதை வைத்து வணிகம் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் துணை தலைவர் ஸ்டீபன் மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தங்களை சுற்றுலா பயணிகள் என்று கூறிக்கொண்டு சிலர் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் இங்கு வருவதற்கான உண்மையான நோக்கம் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும், அதன் மூலம் அக்குழந்தைக்குத் தானாகவே அமெரிக்க குடியுரிமையை பெற்றுத் தருவதும்தான். இது அவர்களுக்கு அமெரிக்க அரசின் நலத்திட்ட உதவிகள், வாக்களிக்கும் உரிமை மற்றும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே உரிய பிற சலுகைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் வகையில் புதிய நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
















