நடராசா லோகதயாளன்.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 861 ஏக்கர் நிலமே அரச மற்றும் தனியார் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக மேற்படி மாவட்டச் செயலகங்கள் எழுத்து மூலம் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசம் உள்ள நிலத்தில் வலி.வடக்கில் உள்ள மக்களின் நிலத்தை மக்களிடமே மீள ஒப்படைக்குமாறு தொடர் போராட்டங்கள் இடம்பெறுவதனாலும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக பங்கேற்பதனாலும் வலி.வடக்கு மட்டும் பேசு பொருளாக உள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவும் பேசப்படும் இடத்தில் உள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டங்களில் தற்போது எவ்வளவு அரச மற்றும் தனியார் நிலம் படையினர் வசம் உள்ளது என வடக்கின் 5 மாவட்டச் செயலகத்திற்கும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்திற்கு மாவட்டச் செயலகங்கள் எழுத்து மூலம் வழங்கிய பதிலின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மொத்தமாக உள்ள நிலம் 3440.78 ஏக்கர் எனவும் இதில் தனியார் காணிகள் 2,570.18 ஏக்கராகவும், அரச காணிகள் 870.60 ஏக்கர் உள்ளது எனவும் 2024 ஆம் ஆண்டிற்குப் பின்பு விடுவிக்கப்பட்ட நிலத்தின் அளவு 61.5 ஏக்கர் என மாவட்டச் செயலக தகவல் வழங்கும் உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.
இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் 5,020.80 ஏக்கர் நிலம் உள்ளதோடு இதில் தனியார் காணிகள் 1236.ஏக்கராகவும், அரச காணிகள் 4,586 ஏக்கர் உள்ளது எனப் பதிலளித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
படையினர் வசம் மொத்தமாக உள்ள நிலம்
1478.5 ஏக்கர் எனவும் இதில் தனியார் காணிகள் 330 .ஏக்கர், அரச காணிகள் .
1148.5 ஏக்கர் எனப் பதிலளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் படையினர் வசம் உள்ள மொத்த நிலங்களின் அளவானது 1222 ஏக்கர் என்றும் இதில் தனியார் காணிகள் 243.5.ஏக்கரும், அரச காணிகள் 978.5 ஏக்கர் என்றும் மாவட்டச் செயலக தகவல் வழங்கும் உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 182.88 ஏக்கர் தனியார் காணிகளும் 714.6 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 897 ஏக்கர் நிலங்களே படையினர் வசம் உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் பீழ் எழுத்தில் செய்யப்பட்ட விண்ணப்பங்களிற்கு பதிலளிக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையிலேயே வடக்கில் 4 ஆயிரத்து 562.88 ஏக்கர் தனியார் காணிகளும், 8 ஆயிரத்து 298.20 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 12 ஆயிரத்து 861.08 ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்றும் உள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்து.
இதேநேரம் வடக்கில் பல காணிகள் படையினருக்கு என்றே முழுமையாக பாரதீனப்படுத்தப்பட்டு விட்டது. அதேபோன்று வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களிற்குரிய பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் படையினர் நிலை கொண்டுள்ளனர் அந்த அளவுகள் இவற்றிற்குற் உள் அடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
















