கங்கை ஆற்றில் குளித்த 4 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். வடமாநிலங்களில் கன்வாரி யாத்திரை என்பது முக்கிய மத நிகழ்வாகும். இந்து மதக்கடவுள் சிவபெருமானை வழிபட பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். பக்தர்கள் யாத்திரை சென்று கங்கை ஆற்றில் இருந்து புனித நீரை சேகரித்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே கன்வாரி யாத்திரையாகும். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கன்வாரி யாத்திரை பக்தர்களில் 4 பேர் அம்மாநிலத்தின் பரூகாபாத் நகரின் பஞ்சல் கட் பகுதியில் பாயும் கங்கை ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆற்றில் நீரோட்டத்தில் அதிகமாக இருந்துள்ளது. இதனால் 4 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதில் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை, விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 4 பேரும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















