”இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், 1ஆவது திருத்தம் முதல் 21ஆவது திருத்தம் வரை ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களின் அதிகார பலத்திற்காகவும், அரசியல் ஆயுளுக்காகவுமே அரசியலமைப்பைத் திருத்தி எழுதியிருக்கிறார்கள்.இதனால் அரசியலமைப்பு என்பது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கேடயமா அல்லது ஆட்சியாளரின் அதிகாரத்தைப் பெருக்கும் ஆயுதமா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது”
—-கே.பாலா
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பு என்பது, நாட்டின் ஜனநாயகப் பண்புகளை செழுமைப்படுத்துவதற்காக வரைந்த ஒரு உயரிய ஆவணம் என்பதை விடவும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர்கள் தங்களின் அரசியல் ஆயுளை நீடித்துக் கொள்ளவும் அதிகாரத்தை தக்கவைக்கவும் வரைந்து கொண்ட ஓர் அரசியல் சதுரங்கப் பலகையாகவே’ வரலாறு முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த 48 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 21 திருத்தங்களும், மக்களின் தேவைகளை விடவும் அக்காலப்பகுதி ஆட்சியாளர்களின் அரசியல் நலன்களையே முதன்மையாகக் கொண்டிருந்தன என்பது கசப்பான உண்மை.
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், 1ஆவது திருத்தம் முதல் 21ஆவது திருத்தம் வரை ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களின் அதிகார பலத்திற்காகவும், அரசியல் ஆயுளுக்காகவுமே அரசியலமைப்பைத் திருத்தி எழுதியிருக்கிறார்கள்.அரசியலமைப்பு என்பது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கேடயமா அல்லது ஆட்சியாளர்களின் அதிகாரத்தைப் பெருக்கும் ஆயுதமா என்ற சந்தேகம் இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்றுநோக்கும் எவருக்கும் எழுவது தவிர்க்க முடியாதது.கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட 21 திருத்தங்களும் அதிகாரப் போட்டிகளின் விளை நிலங்களாகவே இருந்து வந்துள்ளன
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் அடுத்த கட்டமாக, தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ” மாற்றம்” என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம், சட்டத்தரணிகள் சங்கம்,எதிர்க்கட்சிகள் ,பொது அமைப்புக்கள் ,சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளி இத்திருத்தத்தை முன்னெடுப்பது, இதுவும் பழைய அரசியல் சுயநலத்தின் மறுவடிவமா அல்லது உண்மையான மறுசீரமைப்பா என்ற பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவினால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, தொடக்கத்திலிருந்தே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்து வந்த நிலையிலேயே எதனையும் பொருட்படுத்தாது அநுரகுமார அரசாங்கத்தினால் 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின்படி, ஒரு சட்டமூலம் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதனை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். உயர் நீதிமன்றம் அத்தகைய மனுக்களை விசாரித்து, மூன்று முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.அந்தவகையில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்படத் தொடங்கியுள்ளன. இவை தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் சபையில் அறிவிப்பார் .சபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதற்கான திகதிகள் பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறான நிலையில் இதுவரை அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் ஒரு மீள்பார்வையை செலுத்துவோம்.
1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. சபையில் ஆறில் ஐந்து பெரும்பான்மைகளைக் கொண்டதாக அது விளங்கியது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனியொரு அரசியல் கட்சியினால் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகவும் அது அமைந்தது.இந்த வெற்றியைப் பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ஜே. ஆர். ஜெயவர்த்தன 1972 அரசியலமைப்பை இல்லாதொழித்தார். அதன் பிரகாரம் 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அது ஒரு சபையைக் கொண்ட பாராளுமன்றத்தையும் சகல அதிகாரங்களுமுடைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையையும் அறிமுகப்படுத்தியது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்த்தன பதவியேற்றார். ரணசிங்க பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டார்.
1ஆவது திருத்தம் 20 நவம்பர் 1978 இல் கொண்டுவரப்பட்டது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படுகின்ற குறிப்பிட்ட சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட முடியும் என்பதே இந்த திருத்தம்.
2ஆவது திருத்தம் 26 பெப்ரவரி 1979 இல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதற்கும் வெளியேற்றப்படுவதற்குமான நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
3ஆவது திருத்தம் 27 ஆகஸ்ட் 1982 இல் கொண்டுவரப்பட்டது ஜனாதிபதி தனது முதலாலது பதவிக்காலத்தை 4 வருடங்களைப் பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இத்திருத்தம் வகை செய்தது.
4ஆவது திருத்தம் 23 டிசெம்பர் 1982 இல் கொண்டுவரப்பட்டது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பானது இந்த திருத்தம். 1982 டிசெம்பர் 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
5ஆவது திருத்தம் 25 பெப்ரவரி 1983 இல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் வெற்றிடமொன்று நிரப்பப்படாத பட்சத்தில் அதற்காக இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இந்த திருத்தம் ஏற்பாடு செய்தது.
6ஆவது திருத்தம் 8 ஆகஸ்ட் 1983 இல் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படுவதைத் தடை செய்தல். இலங்கைக்குள் தனி அரசொன்றை உருவாக்குவதற்காக குரல் கொடுப்பதிலிருந்து பிரஜைகளை இந்த திருத்தம் தடுத்தது.1983 கறுப்பு ஜூலை இன வன்முறைகளைத் தொடர்ந்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதால் அது கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.
7ஆவது திருத்தம் 4 அக்டோபர் 1983 இல் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தம் மேல் நீதிமன்ற ஆணையாளர்கள் சம்பந்தப்பட்டது. அத்துடன் அது கிளிநொச்சி மாவட்டத்தையும் உருவாக்கியது. இதனுடன் சேர்த்து இலங்கையின் நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது.
8ஆவது திருத்தம் 6 மார்ச் 1984 இல் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.
9ஆவது திருத்தம் 24 ஆகஸ்ட் 1984 இல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியைக் கொண்டிராத அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பள மட்டங்களை சீர்செய்வதற்கான திருத்தம்.
10ஆவது திருத்தம் 6 ஆகஸ்ட் 1986 இல் கொண்டுவரப்பட்டது. பொதுப்பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் பிரகடனங்களை செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை என்ற பிரிவை இரத்து செய்வதறிக்கான திருத்தம்,
11ஆவது திருத்தம் 6 மே 1987 இல் கொண்டுவரப்பட்டது. முதற்தடவை செய்யப்படுகின்ற குற்றங்களைக் கையாளுவதற்கு மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்க அதிகாரங்களை சீர்திருத்துதல். மேல் நீதிமன்ற அமர்வுகள் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வில் இருக்க வேண்டிய நீதிபதிகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையைத் திருத்துதல்.
12ஆவது திருத்தம் 25 செப்டெம்பர் 1987 இல் கொண்டுவரப்பட்டது.இந்த திருத்தம் 1987 செப்டெம்பர் 25 ஆம் திகதி பிரேரிக்கப்பட்ட போதிலும் சட்டம் நுணுக்கம் சார்ந்த தவறுகள் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. நடைமுறையின் ஒழுங்கற்ற தன்மை காரணமாகத் திருத்தங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பன்னிரண்டாவது திருத்தம் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், பன்னிரண்டாவது திருத்தம் என்ற ஒன்று உண்மையில் இல்லை என்றபோதிலும் 17 நவம்பர் 1987 நிறைவேற்றப்பட்ட அடுத்த திருத்தம் பதின்மூன்றாவது திருத்தம் என்று கணிக்கப்பட்டது.
13ஆவது திருத்தம் 14 நவம்பர் 1987 இல் கொண்டுவரப்பட்டது.தமிழையும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்குவதற்கும் மாகாணசபைகளை அமைத்து அவற்றிற்கு அதிகாரங்களைப் பரவலாக்கவும் இது வகை செய்தது. மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் அதிகாரங்களுக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. பொதுமக்கள் பொதுப்பாதுகாப்பு ஒழுங்கு விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
14ஆவது திருத்தம் 24 மே 1988 இல் கொண்டுவரப்பட்டது. சட்டத்திலிருந்து ஜனாதிபதிக்கு இருந்து வந்த விலக்கீடு மேலும் நீடிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டது. தேர்தல் மாவட்டங்களை தேர்தல் வலயங்களாகப் பிரிப்பதற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் மொத்த வாக்குகளில் 1/8 என்ற வெட்டுப்புள்ளியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 29 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு வகை செய்யப்பட்டது.
15ஆவதுதிருத்தம் 17 டிசெம்பர் 1988 இல் கொண்டுவரப்பட்டது.தேர்தல் வலயங்களை இல்லாதொழிப்பதற்கு அரசியலமைப்பின் 96 ஏ சரத்து நீக்கப்பட்டது.
16ஆவது திருத்தம் 17 டிசெம்பர் 1988 இல் கொண்டுவரப்பட்டது சிங்களத்தையும் தமிழையும் நிர்வாக மற்றும் சட்டவாக்க மொழிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடு கொண்டது.
17ஆவது திருத்தம் 3 அக்டோபர் 2001 இல் கொண்டுவரப்பட்டது.அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் கொண்டு வருவதற்கான ஏற்பாடு. தேர்தல் ஆணைக்குழு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவையும் இதில் உள்ளடங்கும். ஜனாதிபதியால் செய்யப்படுகின்ற நியமனங்களுக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
18ஆவது திருத்தம் 8 அக்டோபர் 2010 இல் கொண்டுவரப்பட்டது.ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாடு நீக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கும் உறுப்பினர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற சுயாதீனமான பதவிகளை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
19ஆவது திருத்தம் 28 ஏப்ரல் 2015 இல் கொண்டுவரப்பட்டது.பதினெட்டாவது திருத்தத்தை இரத்து செய்து சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கும் கொண்டு வரப்பட்ட பதினேழாவது திருத்தத்தின் ஏற்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி அரச தலைவராக, அமைச்சரவையின் தலைவராக, பாதுகாப்புப் படைகளின் தலைவராகத் தொடர்ந்து செயற்படுகின்ற அதேவேளை, அவரது பதவிக்காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
20ஆவது திருத்தம் 22 செப்டெம்பர் 2020இல் கொண்டுவரப்பட்டது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே முதலாவது வாசிப்பும் நிறைவேறியது. இது பத்தொன்பதாவது திருத்தத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கும் அதற்கு மேலும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும், பத்தொன்பதாவது திருத்தத்தின் பிறகு கணிசமான அதிகாரங்களைக் கொண்டதாக இருந்து வந்த பிரதமர் பதவி மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லக்கூடிய ஏற்பாடுகளை இந்த திருத்தம் கொண்டிருந்தது.
21ஆவது திருத்தம் 21 ஒக்டோபர் 2022 இல் கொண்டு வரப்பட்டது. 20ஆவது திருத்தத்தைக் குறைத்து, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி பாராளுமன்றத்தை பலப்படுத்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், தற்போது 22 ஆவது திருத்தத்தின் மூலம் அதே சர்ச்சைக்குரிய புயல்மையத்தில் மையம் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட 21 திருத்தங்களும் எதனைப் போதித்தன என்பதை அநுரகுமார அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. மக்கள் மாற்றத்தை விரும்பியே புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். மகா சங்கத்தினர், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் நியாயமான ஐயங்களை புறந்தள்ளிவிட்டு, 22 ஆவது திருத்தத்தை அவசரகதியில் முன்னெடுப்பது மீண்டும் ஒரு பழைய தவறான முன்மாதிரிக்கே வழிவகுக்கும்.
இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு என்பது திருத்தங்களினாலும், அதனால் விளைந்த அரசியல் கொந்தளிப்புகளினாலும் நிரம்பியது. 22 ஆவது திருத்தம் என்பதும் அந்த நீண்ட பட்டியலில் மற்றொரு எண்தானே தவிர, அதுவே இறுதி தீர்வாகிவிட முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறலாம்.ஆனால் சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் சுயாதீனமும் என்றும் மாறாத தூண்களாக இருக்க வேண்டும். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் நம்பிக்கையை வெல்லுமா அல்லது மீண்டும் ஒரு அரசியல் ஸ்திரமின்மைக்கு வித்திடுமா என்ற கேள்விக்கான பதில், ஆட்சியாளர்கள் இந்த விமர்சனங்களை எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது.















