கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் த. சிவபாலு தெரிவிப்பு

“தொல்காப்பியம் என்ற நூலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எமக்காகப் படைக்கப்பெற்ற ஒரு நூலாகும். அது எமது மொழியின் இலக்கணம் பற்றியும் நாகரிகம் பற்றியும் உள்ளடக்கத்தை கொண்டது மாத்திரமல்ல. எமது தமிழ் மக்களின் வாழ்வியலை இறுகப் பற்றிக் கொண்ட ஒரு ‘வேர்’ ஆகும்.
கனடாவில் தொல்காப்பிய மன்றம் நிறுவுப்பெற்றதற்கு பின்னர் அந்த நூல் பற்றிய தேடல் பலரிடத்தில் உருவாகியிருப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் ஒரு செய்தியாகும். எம் மத்தியில் மாணவர்கள் மத்தியிலும் ‘தொல்காப்பியம்’ பற்றிய புரிதலை ஏற்படுத்த ‘மாணவர் பாசறை’ ஒன்று கனடாவில் ஆரம்பிக்கப்பெற்று அது நல்ல பலனைத் தந்து கொண்டிருக்கின்றது. எனவே எனது பார்வையில் “இனிவரும் காலங்களில் கனடாவில் தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் பற்றிய அறிவைப் பெற்ற இளைய தலைமுறை ஒன்று நிச்சயம் உருவாகும்” என்பதை நான் இந்த இந்த இடத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பதிவு செய்கின்றேன்”
இவ்வாறு 24-08-20226 அன்று ஸ்காபுறோ JCS Banquet Services மண்டபத்தில் நடைபெற்ற தொல்காப்பிய மன்றக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மன்றத்தின் முன்னாள் தலைவர் தங்கராசா சிவபாலு தெரிவித்தார்.
கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான மேற்படி ஆலோசனைக் கூட்டத்திற்கு மன்றத்தின் தற்போதைய தலைவர் முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் இல.சுந்தரம் அவர்கள் கலந்துரையாடலை தொகுத்து வழங்கினார்.
கனடாவில் அடுத்த மாதம் செப்படம்பர் 19ம் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசியர்கள் மற்றும் ஒலி-ஒளி ஊடகங்கள் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் நிறுவனர்கள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மேற்படி கலந்துரையாடலில் பல பயனுள்ள கருத்துக்கள் உரையாற்றிய அனைவராலும் பகிரப்பெற்றன.
முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் அவர்கள் உரையாற்றும் போது கனடாவில் தொல்காப்பியம் பற்றிய புரிதலையும் அறிவையும் ஆர்வத்தையும் தோற்றுவிக்க எமது மன்றம் கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்றது என்றும் அதனை மக்கள் மயப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
அன்றைய நிகழ்வின் பிரதான மேசையில் திருவாளர்கள் பாவலர் சண்முகராஜா, வைத்தியர் ரகுமாறன், திருமதி மன்றத்தின் செயலாளர் கலா அரியராசா, மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான திரு சுகந்தன் வல்லிபுரம் ஆகியோரும் உடனிருந்தனர்.
மேற்படி கலந்துரையாடல் பயனுள்ள ஒன்றாக அமைந்தது என அங்கு கலந்து கொண்ட அனைவரும் கருத்துக்களைப் பகிர்ந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
அன்றை நிகழ்ச்சிக்கு தனது மண்டபத்தை இலவசமாக வழங்கிய JCS Banquet Servicesயூட் அவர்களுக்கு மன்றத்தின் சார்பிலும் சபையோர் சார்பிலும் நன்றியும் தெரிவிக்கப்பெற்றது.
—சத்தியன்




















