யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க பாதை போட்டதன் மூலம், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் பணிந்துவிட்டாரென ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
ரூ.2 ஆயிரம்வரையிலான யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கோ அல்லது ருபே டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்துக்கோ வங்கிகள் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால், ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிமாற்றத்துக்கு வர்த்தகர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தகர் தள்ளுபடி விகிதம் பூஜ்ஜியமாக இருக் கும் கொள்கைக்கு அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது, மோடி அரசு அந்த கொள்கையை மாற்றி, யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க பாதையை திறந்து விட்டுள்ளது. இனிமேல், ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்த்தக யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு எம்.டி.ஆர். விதிக்க முடியும். அந்த பரிமாற்றங்கள். மொத்த அளவில் 5 சதவீதமாக இருந்தாலும், மொத்த பரிமாற்ற மதிப்பில் 65 சதவீதமாக இருக்கும்.வாடிக்கையாளர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் எங்கிருந்து வரும்? விலை உயர்த்தப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் இருந்து நோடியாக பெறப்படும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், சமரச பிரதமர், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மீண்டும் பணிந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
















