பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்க உள்ளார். 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவர் தனது 10-வது வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார். அவர் நடித்த முதல் படம் ‘சேவாசதன்’. அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்த படம் ‘மீரா’. கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றார். 1954-ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968-ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1998-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.
இவரின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்க உள்ளார். அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் திரிஷா, நயன்தாரா மற்றும் சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் கைக்கூடாததால் நடிகை ராஷ்மிகா மந்தனா இறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















