மன்னார் நிருபர்
(17-09-2026)
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்களின் நீண்டகால இருப்பிடப் பிரச்சினைக்குத் தீர்வாக 48 தாதிய உத்தியோகத்தர்கள் தங்கக்கூடிய 4 மாடிகளைக் கொண்ட புதிய குடியிருப்பு வளாகம் அமைப்பதற்கு 17ம் திகதி வியாழக்கிழமை அன்று (17) காலை அடிக்கல் நாட்டப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாகாண சபை நிதியிலிருந்து ரூ. 170.04 மில்லியன் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்படுகிறது.
இப்புதிய விடுதி வளாகத்தின் கட்டுமானப் பணிகளை 2027 ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலதிக அபிவிருத்திகள்: மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் பணிகளுக்காக ரூ. 235 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கு 300 சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ள துடன், மருத்துவமனைகளுக்கான புதிய உபகரணங்களைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
: இந்திய நிதியுதவி மற்றும் மாகாண சபை நிதியின் கீழ் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் சுமார் ரூ. 1500 மில்லியன் பெறுமதியான சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணப் முதன்மைச் செயலாளர் தனுஜா முருகேசன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.எஸ்.டி. பத்திரன மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கள், மருத்துவர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.
















