யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு மிகப் பிரமாண்டமானது. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் அப்படி ஒரு தூதரக நிகழ்வு இதுவரை இடம் பெற்றதில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு வகைப்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், சுவிற்சர்லாந்தின் நிதி உதவித் திட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பிள்ளைகள்… என்று பெருந்தொகையானவர்கள் அந்த மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இதுவரை இடம்பெற்ற தூதரக நிகழ்வுகளில் மிகப்பெரியது அது எனலாம்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் மண்டபத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின் தூதரகத்தால் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சுவிற்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 70ஆ வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டது. வழமையாக தலைநகரில், கொழும்பில் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டன.
இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்படுவது இதுதான் முதல் தடவை அல்ல.ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கைக்கான ஐநா அலுவலகமும் அவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியது. ஐநாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் விதத்தில் அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.. என்று பல்வேறு வகைப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
எனினும் இந்த நிகழ்வுடன் ஒப்பிடுகையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு மிகப் பிரமாண்டமானது. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் அப்படி ஒரு தூதரக நிகழ்வு இதுவரை இடம் பெற்றதில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு வகைப்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், சுவிற்சர்லாந்தின் நிதி உதவித் திட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பிள்ளைகள்… என்று பெருந்தொகையானவர்கள் அந்த மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இதுவரை இடம்பெற்ற தூதரக நிகழ்வுகளில் மிகப்பெரியது அது எனலாம்.
பிற்பகல் 2 மணியிலிருந்து 7மணி வரை என்று நேரமிடப்பட்டிருந்த அந்த நிகழ்வில், அனேகமானவர்கள் இரண்டு மணிக்கே வந்து விட்டிருந்தார்கள். வடமாகாண ஆளுநரின் வருகைக்காக நிகழ்வு அரை மணித்தியாளத்துக்கும் குறையாமல் காத்திருந்தது.
நிகழ்வில், சுவிற்சர்லாந்தின் புதிய தூதுவர் உரையாற்றினார். உரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் ஒர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அது குறும்படம் என்று கூறப்பட்டாலும் நெடும்படம்தான். அந்தப் படத்தில் கடந்த 70 ஆண்டுகளில் சுவிற்சர்லாந்து தூதரகம் இலங்கைத் தீவில் முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் தொகுக்கப்பட்டு இருந்தன.
அதன்பின் மூன்று பேர் கலந்துகொண்ட ஓர் உரையாடல் இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றது. தமிழ்ப் பகுதிகளில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு சுவிற்சர்லாந்து நாட்டின் நிதி உதவியோடு வீடுகளைக் கட்டிக் கொடுத்த (Swiss Agency for Development and Cooperation-SDC) “அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான சுவிற்சர்லாந்தின் முகவர் அமைப்பு” என்ற நிறுவனத்துக்குப் பொறுப்பாக இருந்த சுவிஸ் அதிகாரியும், வடமாகாண ஆளுநரும்,சுவிற்சர்லாந்தின் மீளக் குடியமர்த்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பூநகரிப் பிரதேசத்தில் மீளக்கட்டி எழுப்பப்பட்ட பரமன்கிராய் கிராமத்தின் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருமாக மூன்று பேர்கள் அந்த உரையாடலில் கலந்து கொண்டார்கள்.
அதன் பின் ஓர் ஒளிப்படக் காட்சி திறந்து வைக்கப்பட்டது.அந்த ஒளிப்படக் காட்சியில் சுவிற்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பங்களிப்புச் செய்த 70 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த 70 பேர்களின் முகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் அவர்களுடைய பங்களிப்புகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. சுவிற்சர்லாந்து நாட்டவர்களும் உட்பட இலங்கைத் தீவில் உள்ள மூன்று இனத்தவர்களும் அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.சம்பந்தரின் முகமும் அங்கே இருந்தது.
இந்த நிகழ்வில் அதிகம் கவர்ச்சியாக இருந்த விடயம் என்னவென்றால், அங்கே வந்திருந்த வீட்டுத் திட்டப் பயனாளிகளும் அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் சுவிற்சர்லாந்து நாட்டின் தூதுவரோடு நின்று படம் எடுத்துக் கொண்டமைதான். மிக ஆர்வமாக அவரோடு நின்று படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு வெளிநாட்டுத் தூதுவரும் உள்ளூர் மக்களும் சந்தோசமாகப் படம் எடுத்துக் கொண்டு ஒரு நிகழ்வு.
அதிலும் குறிப்பாக சுவிற்சர்லாந்தின் வீடமைப்புத் திட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியோடு நின்று படம் எடுப்பதற்கு அந்த வீடமைப்பு திட்டத்தால் பயனடைந்தவர்கள் அதிகம் ஆர்வமாகக் காணப்பட்டார்கள். செல்பி யுகத்தில் ஒரு தூதரகத்துக்கும் பொது மக்களுக்கும் இடையிலான இடையூடாட்ட நிகழ்வில் அப்படித்தான் ஒளிப்படங்கள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.
சுவிற்சர்லாந்து இதுவரையிலும் வடக்கு – கிழக்கில் மீளக்கூடியமாறும் மக்களுக்கு 8000 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளது. அந்த வீடுகள் பொதுவாக அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்படுகின்ற கொலனி வீடுகளைப் போல நெருப்பு பெட்டி வீடுகள் அல்ல. ஒப்பீட்டளவில் பெரிய வீடுகள். வளமான வீடுகள். 8000ஆயிரம் வீடுகள் எனப்படுவது சாதாரண விடயம் அல்ல. இலங்கைத் தீவில் அவ்வாறு வடக்கு – கிழக்கில் மீளக்கூடியமரும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்த வெளிநாடுகளில் அதிக தொகை வீடுகளைக் கட்டிக்கொடுத்தது இந்தியாதான். இந்தியா இதுவரை கட்டிக் கொடுத்த அல்லது புனரமைத்த வீடுகளின் மொத்தத் தொகை 46000.
சுவிற்சர்லாந்து வீடுகளை மட்டும் கட்டிக்கொடுக்கவில்லை. நாட்டில் இனங்களுக்கு இடையிலான; சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களை அது நெருங்கி வந்திருக்கிறது என்பது அந்த நிகழ்வில் தெரிந்தது. 70 ஒளிப்படங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இருந்தார்கள். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அந்த அமைப்புகளோடு சுவிற்சர்லாந்து நெருங்கிச் செயற்படுகிறது. மேலும் அண்மை ஆண்டுகளில் சுவிற்சர்லாந்து அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
சுவிற்சர்லாந்தின் வீடமைப்புத் திட்டங்கள் பாராட்டப்படுகின்றன. அது எந்தளவுக்குப் பயனாளிகளைச் சென்றடைந்திருக்கிறது என்பது அவர்கள் அந்த வீடமைப்புத் திட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த சுவிட்சர்லாந்து நாட்டவரோடு படம் எடுத்துக் கொள்வதில் காட்டிய ஆர்வம் நிரூபித்தது. அதேசமயம் நல்லிணக்க முயற்சிகளில் குறிப்பாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் விவகாரங்களிலும் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் செயற்பாடுகள் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களாலும் கட்சிகளாலும் விமர்சிக்கப்படுகின்றன.
குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட “இமாலயப் பிரகடனம்” கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்தப் பிரகடனத்தை உருவாக்கிய புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அமைப்புகளுக்கும் பௌத்த மகா சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே அனுசரணையாளராகவும் ஏற்பாட்டாளராகவும் செயல்பட்டது தூதரகத்தின் ஓய்வுபெற்ற ஒர் அதிகாரி ஆவார். எனவே இமாலயப் பிரகடனத்தின் பின்னால் சுவிட்சர்லாந்து இருப்பதாக அப்பொழுது விமர்சனங்கள் வந்தன.
அதன்பின் அண்மை ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகளும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தனது நாட்டில் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளை சுவிட்சர்லாந்து தூதரகம் செய்து கொடுத்தது.இந்தச் சந்திப்புகளும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை மட்டுமல்ல,ஒருபகுதி தமிழ்க் கட்சிகள் சுவிற்சர்லாந்தின் மீதும் விமர்சனங்களை முன்வைக்கும் ஒரு நிலைமை தோன்றியது.
இலங்கைத் தீவில் கடந்த சுமார் 75ஆண்டுகளுக்கும் மேலான இன முரண்பாட்டுக் களத்தில் நடுநிலையாளராக அல்லது மத்தியஸ்த்தராக அல்லது வசதிப்படுத்துனராக அல்லது ஏதோ ஒரு வகையில் பங்களித்த, முயற்சித்த வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பாலானவை தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுவதைக் காண்கிறோம். இந்தியாவில் இருந்து தொடங்கி சுவிற்சர்லாந்து வரை இதற்கு விதிவிலக்கில்லை. முன்னாள் இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றில் தொடங்கி நோர்வேயின் சொல் ஹெய்ம் வரையிலும் யாருமே இதில் தப்பவில்லை. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரையிலும் இடம்பெற்ற எல்லாச் சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பிடம் விமர்சனங்கள் உண்டு.
இங்கே ஒரு கேள்வியைத் தொகுத்துக் கேட்கலாம். கடந்த 75 ஆண்டுகளிலும் இனமுரண்பாட்டில் சம்பந்தப்பட்ட மூன்றாவது தரப்புகள் அல்லது வெளித் தரப்புகள் ஒரு கட்டத்தில் ஏன் தமிழ் மக்களால் சந்தேகிக்கப்படுகின்றன? மூன்றாவது தரப்பு ஒன்றின் பிரசன்னம் இல்லாமல் இந்த நாட்டில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளையும் ஒரு மேசைக்குக் கொண்டுவர முடியாது என்பதே கடந்த 75 ஆண்டுகால சமாதான முயற்சிகளில் பெற்ற பாடமாகும். ஆனால் இந்த எல்லாச் சமாதான முயற்சிகளின் போதும் மூன்றாவது தரப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்குப் பிரதான காரணம் என்ன? வெளித் தரப்புகள் ஈழத் தமிழர்களை உண்மையாகவே ஏமாற்றி விட்டனவா? அல்லது வெளித் தரப்புகளை நோக்கிய ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் அளவுக்கு மிஞ்சியவைகளாக அல்லது யதார்த்தமற்றவைகளாகக் காணப்படுகின்றனவா? அல்லது வெளித் தரப்புகளை தமிழ்த் தரப்பினால் கெட்டித்தனமாக, தீர்க்கதரிசனமாகக் கையாள முடியவில்லையா ? எது பொருத்தமான காரணம்?
சண்டையோ சமாதானமோ எல்லாவற்றுக்கும் ஓர் அரசியல் இலக்கு இருக்கும். ராஜதந்திர இலக்குகள் இருக்கும். சமாதானம் என்பதற்காக அதை நீதி நெறிகள் அறநெறிகளுக்கூடாக விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. இந்த பூமியிலே தூய சமாதான என்று எதுவுமே இல்லை.
நாடுகள் நாடுகளோடு வைத்துக்கொள்ளும் உறவுகளில் மட்டுமல்ல நாடுகளுக்கும் அரசற்ற தரப்புகளுக்கும் அரசற்ற தரப்புகளின் போராட்ட அமைப்புகளுக்கும் இடையிலான உறவுகளிலும்கூட ராணுவப் பொருளாதார அரசியல் இலக்குகள் இருக்கும். இந்தக் கொடூரமான பூமியிலே அரசுக்கும் அரசுகளுக்கும் இடையிலான அல்லது அரசுக்கும் அரசற்ற தரப்புகளுக்கும் இடையிலான அல்லது அரசுகளுக்கும் தனி நபர்களுக்கும் இடையிலான உறவுகளில் தூய அன்பு, தூய அறம் என்பவை எல்லாம் இருப்பது குறைவு. மாறாக நிலையான அரசியல், ராஜதந்திர, ராணுவப் பொருளாதார நலன்கள் தான் இருப்பதுண்டு.
இந்த அடிப்படையில்தான் சமாதானத் தூதுவர்களையும் சமாதானம் செய்ய வரும் நாடுகளையும் நிறுவனங்களையும் அல்லது அனுசரணை புரியவரும் அமைப்புக்களையும் நாடுகளையும் நிறுவனங்களையும் ஈழத் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சமாதானமும் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான். அங்கேயும் அரசியல் பொருளாதார ராணுவ ராஜதந்திர இலக்குகள் இருக்கும். இந்த பூமியிலே தூய சமாதானம் என்று எதுவுமே கிடையாது. தாங்கள் நீதிக்காகப் போராடுவதால் உலகம் தங்களிடம் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கக் கூடாது. இந்த இடத்தில் நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் ஆபிரிக்கப் பழமொழியைக் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம் “நீ நீதியாக இருப்பதினால் உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கக்கூடாது. வாறு எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று எதிர்பார்ப்பதைப் போன்றுதான்”.
















