States, Brad Bradford, a key candidate of Toronto’s Maroral Race.
ரொறன்ரோ மாநகரில் விரைவானதும் ஆக்கபூர்வமானதுமான மாற்றங்களைக் காண வேண்டுமாயின் அதன் மேயரையும் உடனே மாற்றவேண்டும் என நடைபெறவுள்ள ரொறன்ரோ மாநகர மேயருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவரான கருதப்படும் பிராட் பிராட்போர்ட் அவர்கள் தெரிவிததார். சில நாட்களுக்கு முன்னர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு வுழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டொராண்டோவை மாற்ற மேயரை மாற்ற வேண்டும்!
தங்கள் தேர்தல் பிர்சசாரத்தை தொடங்கிய நாள் தொடக்கம் இன்று வரை தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவம், வாக்காளர்களின் விருப்பங்கள் மற்றும் தங்களுக்குள்ள ஆதரவு தொடர்பாக பார்வை ஆகியவை பற்றி முதலில் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற முதல் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிராட் பிராட்போர்ட் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவிததார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது அழகிய ரொறன்ரோ மாநகரில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் ரொறன்ரோ மாநகர சபையும் அதன் தலைமையும் உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டது. மக்கள் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தடுமாற்றங்களை அனுபவிக்கின்றார்கள். எனவேமாநகரில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், மேயர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று டொராண்டோ மேயர் வேட்பாளர் பிராட் பிராட்போர்ட் (Brad Bradford) தெரிவித்தார்.

‘கனடா உதயன்’ பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் நடத்திய மேற்படி நேர்காணலில் வேட்பாளர் பிராட் பிராட்போர்ட் திட்டவட்டமாக பல விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குற்றம், நெரிசல், வாழ்க்கைச் செலவு: மூன்றிலும் தோல்வியடைந்த நிர்வாகமே கடந்த பல வருடங்களாக ரொறன்ரோ மக்கள் அனுபவித்தார்கள்
ரொறன்ரோவின் தற்போதைய நிர்வாகச் சூழல், பொதுமக்களின் பாதுகாப்பு, வரவு-செலவுத் திட்ட மறுசீரமைப்பு, சிறு வணிகர்களுக்கான சலுகைகள் மற்றும் வீட்டுவசதி நெருக்கடிகள் குறித்து மேயர் வேட்பாளர் பிராட் பிராட்போர்ட் விரிவாக விளக்கினார்.
ரொறன்ரோ நகரம் உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நகரம் என்பதைக் குறிப்பிட்ட பிராட், தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் குற்றச் செயல் அதிகரிப்பு, வாகன நெரிசல், வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றையே பிரதான கவலைகளாக முன்வைப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
மாநகர நிர்வாகமும் கவுன்சிலர் அலுவலகங்களும் பொதுமக்களின் தேவைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், அதிகாரத்துவத்தில் ‘இன்று முடியாததை நாளை செய்யலாம்’ என்ற மெத்தனப் போக்கு நிலவுகிறது. நான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கவுன்சில் மற்றும் மாநகரப் பணியாளர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், முடிவுகளை விரைந்து வழங்கும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தையும் கட்டாயமாக்குவேன் என்று குறிப்பிட்டார்.
ரொறன்ரோவில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், வாகனத் திருட்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், நகரின் முதன்மையான தேவை பொதுப் பாதுகாப்பு என்று தெரிவித்தார்.
முந்தைய மேயர்களைப் போலன்றி, தற்போதைய மேயர் ஒலிவியா சௌ அவர்கள் பொலிஸ் சேவை சபையில் (Toronto Police Services Board) அங்கம் வகிக்காமல் பொறுப்பைத் தவிர்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பிராட், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் நேரடியாகப் பொலிஸ் சேவை சபையில் அங்கம் வகித்து கொள்கை மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழிநடத்துவேன் என்றார்.உறுதி பட த் தெரிவித்தார். அவர் தன்னிடம் கேட்கப்பெற்ற அனைத்துக் கேள்விகளுக்கும் உற்சாகமான முறையில் கவனத்துடன் பதிலளித்தார்.

கனடாவின் பிற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் டொராண்டோவில் 100,000 மக்களுக்கு வெறும் 165 களப் பொலிஸாரே உள்ள நிலையில், மேலும் 1,000 களப் பொலிஸ் அதிகாரிகளைப் புதிதாகப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த அதிகரிப்பு நகரில் குற்றச் செயலைகளைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொலிஸ் துணை நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பணிக்குழு ஆகியவற்றைத் தொடர் சிக்கல்கள் நிறைந்த பகுதிகளில் நிறுவ உள்ளதாகவும் குறிப்பிட்டார். எல்லைகள் கடந்து செயல்படும் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்க CSIS, RCMP, OPP உள்ளிட்ட பிராந்தியக் காவல் அமைப்புகளை ஒன்றிணைத்துக் கூட்டுப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் குற்றம் இழைப்பவர்கள் தங்கள் செயல்களிலிரந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் எமக்கு கிட்டும் என்றும் தெரிவித்தார்.
மேற்படி உதயன் நேர்காணலில் நிதிநிலை நவீனமயமாக்கல் மற்றும் சேவைக் குறைப்பின்றி நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் விளக்கமளித்த பிராட், “மாநகர வரவு-செலவுத் திட்டத்தை மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி மேலாண்மைக்கு இணையாக நவீனமயமாக்க உள்ளேன். என்றும் செயல்பாட்டுச் செலவுகளுக்கான நிதியை (Operating budget) மூலதனக் கட்டமைப்புச் செலவுகளுக்குத் (Capital budget) திசைதிருப்பும் வழக்கத்தை நிறுத்தி, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகால குறைந்த வட்டி நிதியுதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மீதமாகும் சுமார் 250 முதல் 360 மில்லியன் டொலர் தொகையைக் கொண்டு, வரிகளை உயர்த்தாமலும் அத்தியாவசிய சேவைகளைக் குறைக்காமலும் புதிய பொலிஸார் நியமனம் உள்ளிட்ட களப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட ஏனைய சமூகங்கள் சார்ந்த சிறு வணிகர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததுடன், ஸ்கார்பரோ, மார்க்கம் வீதி மற்றும் , லோரன்ஸ் வீதி கிழக்கு மற்றும் கென்னடி வீதி ஆகியன அமைந்திருக்கும் பகுதிகளில் ப வாழும் புலம்பெயர்ந்த மற்றும் தமிழ் தொழில்முனைவோரின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், சிறு வணிகங்களுக்கான தடைகளை அகற்றவும் அவர்களின் வர்த்தகம் பெருகி வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் செயற்பாடுகளை அதிகரிக்கவும் உறுதியளித்தார்.
மேலும், டவுன்டவுன் என்று அழைக்கப்படும் பகுதிகளில் உள்ள வர்த்தகக் நிறுவனங்களுக்கு இணையான வரியைச் சிறு வணிகங்கள் மீது சுமத்துவதைத் தவிர்க்க, தாம் முன்னெடுத்த சிறு வணிக வரிப் பிரிவின் கீழ் சொத்து வரியில் மேலும் 25% குறைப்பும், தொழில்துறைப் பிரிவினருக்கு 25% குறைப்பும் அமுல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வணிக உரிமங்கள் மற்றும் கட்டட அனுமதிப் பத்திரங்கள் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் வணிகர்களின் மூலதனத்தை வீணடிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற இரட்டை உரிம நடைமுறைகளை ரத்து செய்து, விரிவாக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு விரைவு அனுமதிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதனால் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழைய கட்டடங்களில் வாழும் வாடகைக் குடியிருப்பாளர்களின் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் வினாவிய போது அதற்கு பதிலளித்த ரொறன்ரோ மாநகர மேயருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவரான கருதப்படும் பிராட் பிராட்போர்ட் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ‘RentSafeTO’ திட்டம் மற்றும் நகராட்சித் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் (Bylaw enforcement) தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், புதிய நகராட்சி குடிநீர் கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 300 டொலர் வரை சேமிப்பு ஏற்படுத்தப்பட்டு, அது வாடகைதாரர்களுக்கும் நேரடியாகக் கிடைக்கும் வகையில் மாகாண அரசுடன் இணைந்து வழிவகை செய்யப்படும் என்றும் கூறினார்.
பதவியேற்ற முதல் ஆண்டில் எவ்வாறான திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் என்று பிரதம ஆசிரியர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த பிராட், தமது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் மக்கள் காணக்கூடிய மாற்றங்களாகப் பின்வருவனவற்றை உற்சாகத்துடன் பட்டியலிட்டார்:
முதல் 100 நாட்களில் எக்ளிண்டன் ஈஸ்ட் LRT: ஸ்கார்பரோவின் போக்குவரத்துத் தேவைகளைப் புறக்கணித்த முந்தைய அணுகுமுறையை மாற்றி, பதவியேற்ற 100 நாட்களுக்குள் எக்ளிண்டன் ஈஸ்ட் LRT (Eglinton East LRT) திட்டத்திற்கு மாகாண மற்றும் மத்திய அரசுகளின் நிதியுதவியைப் பெற்று, பதவிக்கால இறுதிக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்குதல். முதலாவதாக செயற்படுத்தப்படும் என்றும்
சொத்து வரி நிறுத்திவைப்பு (Tax Freeze): கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான வரி உயர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சொத்து வரியை நிறுத்திவைத்தல்.
15 ஆண்டுகளுக்குப் பின் விரிவான தணிக்கை: மாநகர சபையின் வீண் செலவுகளைக் கண்டறிய ஒவ்வொரு வரியையும் தணிக்கை செய்து (line-by-line review) நிதி இழப்புகளைத் தடுத்தல்.
போக்குவரத்து நெரிசல் குறைப்பு: கனடியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்னல்களை ஒருங்கிணைத்து, வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். என்று சுட்டிக்காட்டினார்.
இவ்வாறாக ரொறன்ரோ மாநகர மேயருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவரான கருதப்படும் பிராட் பிராட்போர்ட் அவர்கள் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு வழங்கிய பேட்டியில் ஆணித்தரமான கருத்துக்களை மூன்வைத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.















