முகேன் ராவ் கதாநாயகனாக நடித்த ‘மைலோ’ படத்தின் காணொளி வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர், ‘வேலன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ‘ஜின்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மைலோ’. இப்படத்தை கவின் மூர்த்தி இயக்கியுள்ளார். ‘மைலோ’ திரைப்படம் ஒரு லேப்ரடார் வகை செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்றச் சம்பவம் ஒன்றின் மர்மத்தை, அந்த நாயின் உதவியுடன் கதாநாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. ‘ஒரு செல்லப்பிராணி மட்டுமல்ல, ஒரு மௌன சாட்சி’ என்ற வாசகம் படத்தின் கதைக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மர்மம், விசாரணை உள்ளிட்ட அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, பிக்பாஸ் ஜனனி, ஆதித்யா கதிர், இளவரசு, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே.ஐ. சுரேஷ் தயாரித்துள்ளார். சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் மலேசியா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது இப்படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் புரோமோ காணொளி வெளியாகியுள்ளது.
















