திருமதி பவானி சச்சிதானந்தன்- இலங்கை
சொல்லிக் கொள்ள முடியாத ஒருவித, தனிமையும் வெறுமையும் மனதை வாட்டிட கோகிலாவுக்கு தன் இயலாமையை பகிர்ந்திட யாரை அணுகலாம் என்ற குழப்பம் தடுமாற்றத்தைத் தந்தது. அதனால் அவள் தவித்து நின்றாள். அவள் வயதுக்கு இது போல் எத்தனையோ ஜீவன்களை பார்த்துப் பேசி ஆறத்தழுவி ஆறுதல் கூறி மகிழ்ச்சிப் படுத்தி உள்ளாள். ஆனாலும் தனக்கென்று வேதனைகள் சுமையான போது தான் அதன் வலி இத்தனை கனதியானது என்று புரிந்துகொண்டாள்.
அன்று அலவலாவி பலருக்கும் தைரியம் ஊட்டிய பல சந்தர்ப்பங்கள் நினைவில் வந்தாலும் அதிலெல்லாம் நிம்மதிக் காண முடியாது அவளது மனம் தவிப்புடன் ஏதோ ஒன்றைத் தேடி ஓடும் நிலைக்குச் சென்றது.
அழகிய வீடு, பெரிய தோட்டம் அக்கம் பக்கம் கணவனின் உறவுகள் வாழும் வீடுகள் திரும்பும் திசையிலெல்லாம் “என்ன எப்படி சுகமாயிருக்கீங்களா, என்ன செய்யறீங்க, சாப்பிட்டுங்களா ? புள்ளைங்க படிக்கிறாங்களா?” என்று இன்னும் பல அன்றாட கேள்விக் கணைகளுடன் கணவனின் சொந்தங்கள் உரையாடி ஒன்றித்து கலந்திடுவார்கள்.
சலிப்புத் தட்டாத நிமிடத்தில் பிரச்சினைகளை மறந்திடும் மனிதத்தை மதிக்கத் தெரிந்த அன்பு உள்ளங்கள். உண்மையில் நோய்கள் பறந்து போகும் அளவிற்கு சிரிக்கத் துணிந்த ஆசை சொந்தங்கள். கவலையே இல்லாது கடந்திடும் அழகிய வசந்த காலம். ரசனை மிகுந்திட சிறுச் சிறு பிரச்சினைகள் எழுந்தாலும் குடும்பத்தில் பெரியவர் ஒருவர் பேசி சரி செய்து இயல்பு நிலையை உருவாக்கி ஒன்றும் இல்லாத பூஜியம் ஆக்கி சிரிப்பை தூவிட அனைவரும் சாதாரணமாகி விடுவார்கள். அப்படி வாழ்ந்த சூழல் மீண்டும் எத்தனைப் பிறவி எடுத்தாலும் சொந்தங்களிடம் பெருமைகளைப் பேசியே வாழ்ந்து கழித்திடலாம் என ஆசையாக நினைக்கக் கூடிய நினைவுகளை தந்திட கடந்த காலம் கண் முன்னால் வந்து நிற்கின்றது.
கோகிலா தன் கணவன் குமரன், ஏழு பிள்ளைகள் என அழகிய வசந்த வட்டத்துக்குள் குடும்பம் என்ற இல்லறத்தை கோவில் போன்று அலங்கரித்து வாழ்க்கையை சுதந்திரமாய் வாழ்ந்தவள். குமரனும் நல்ல வருமானம் தரக்கூடிய வர்த்தகராக இருந்ததினால் பணச் சிக்கல்கள் என்று கூறிடும் அளவிற்கு எப்போதுமே தாக்கம் செலுத்த வில்லை. உழைப்பை தன் வசமும், வருமானத்தை கோகிலாவின் கட்டுப் பாட்டிலும் இட்டவர் பிள்ளைகள் வளர்ப்பில் கடுமையானவராகவும் அவர்களின் பொறுப்பை கோகிலாவிடமும் ஒப்படைத்த வண்ணம் நிம்மதியாக தொழில் மூழ்கிச் செயற்பட்டார்.
கோகிலாவும் சுங்குடி பட்டுச் சேலையில் ஐம்பது சத அளவில் வட்டமாய் குங்குமப்
பொட்டு நெற்றியில் சிறியதாய் சிரிப்பு நேர்த்தியான உடை நடை பாவனையில் அன்று மலர்ந்த மலராக புன்னகைத்த முகத்தோடு களையாக இருப்பாள். இவளைப் பார்ப்பவர்களுக்கு அல்லது பேசியவர்களுக்கு மீண்டும் ஒருதரம் பார்க்க வேண்டும், பேச வேண்டும் எனத் தோன்றிடும் அளவிற்குஅன்பைப் பொழிந்து உறவாடிடுவாள்.
ஆக! யாரோடும் பிரச்சினை, கோபம், கர்வம், வைராக்கியம், பிரிவு என்று கூறிடும் வகையில் என்றுமே இருந்ததில்லை. குமரனினினதும் கோகிலாவினதும் உறவினர்கள் சர்வ சாதாரணமாக வந்து உறவாடிப் போவார்கள். யார் வந்து போனாலும் வயிறார உணவருந்தி அன்பளிப்புகள் கை நிறைந்திட மகிழ்ச்சியாகவே விடைபெறுவார்கள். ஒவ்வொரு வீட்டு விஷேடங்களிலும் முக்கிய அழைப்பாக குமரன் கோகிலா தம்பதியினர் இடம் பெற்று இருப்பார்கள். தன் பிள்ளைகள் மட்டுமல்லாது இன்னும் பல பிள்ளைகளுக்கு அப்பா அம்மாவாக நின்று திருமணம் எனும் மங்கள விளக்கேற்றிட துணையாகி மகிழ்வித்து மகிழ்ந்திருக்கின்றார்கள். ஊரில் எல்லோரிடமும் இவர்களுக்கான மரியாதை அச்சு பிசகாமல் அப்படியே நீண்டு நிலைக்க வாழ்ந்த பெருமை குமரன் கோகிலாவையே இணைந்திட சுகமான நாட்களாக வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
இவ்வாறாக காலம் கடந்திட, தம் பிள்ளைகளும் திருமண வயதுகளை அடைந்திட, முறையாக திருமணங்கள் செய்து கொடுத்து அவரவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திட, பேரன் பேர்த்திகள் கண்டு மகிழ்ந்திட ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அழகாக பூச்சூடிட குமரன் கோகிலா பெற்ற ஆண் பெண் பிள்ளைகள் வீடுகளுக்கு விருந்தாளியாக போய் வந்தார்களே தவிர எந்த வீட்டிலும் உரிமையோடு அதிக நாட்கள் தங்கிடவே இல்லை.
மருமகன், மருமகள் பேரக் குழந்தைகளுகள் அவர்களைத் தங்கிச் செல்லும்படி கேட்டாலும் ஏதாவது காரணங்களைச் சொல்லி தம் இல்லம் நோக்கி வந்திடுவார்கள்.
தமக்கென கடவுள் அனைத்து வசதி வாய்ப்புகளையும் தந்திருக்க எதற்காகவும் இன்னுமொருவரில் தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லாது சுதந்திர வாழ்க்கையை அனுபவித்தார்கள்.
இருந்தும் அதிக ஜீவன்கள் ஓடி ஆடித் திரிந்த வீட்டில் தம்மோடு பிள்ளைகள் யாரேனும் குடும்பமாய்
வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் மகிழ்ந்திடலாம் என்று சில வேளை இருவரும் நினைக்க மறக்கவும் இல்லை.
அதே வேளை தாம் பிறந்து வளர்ந்த வீட்டில் பங்கு கேட்டு வந்து நிற்கின்ற அளவிற்கு எந்த பிள்ளைகளுக்கும் தேவை ஏற்படவும் இல்லை.பெரிய வசதியாக இல்லா விட்டாலும் தேவைகள் பூர்த்தி ஆகிடும் வகையில் அவர்களும் சுகமாக வாழ்ந்தார்கள்.
அதனால் தாம் பெற்ற பிள்ளைகள் கண் காணாத தூர இடங்களி்ல் கூட மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்ற மன நிம்மதியில் தாய் தகப்பனாக மகிழ்ந்தார்கள்.
தேவைகள் கருதி வீடுகளுக்குப் போய் வந்தார்கள். அதன் மூலம் ஒற்றுமையையும் காத்தார்கள்.
கடவுளை வேண்டி பூசைகள் செய்து சுமையில்லா நிதர்சனமான வாழ்க்கையில் சுகம் கண்டார்கள்.
இப்படியாக வாழ்ந்த வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக நாம் தனிப்பட்டுப் போய்விடுவோம் என நினைக்க முன்பே வீட்டுக்குள் இருவரும் தனித்தார்கள்.
உதவிக்கு இருந்தவர்கள் எந்த ஒரு களவு பொய்யும் இல்லாது கடமைகளை இருவருக்கும் சரியாக செய்தார்கள். உதவியாளர்களுக்கான கொடுப்பனவுகளை மாதா மாதம் கையளிக்க அவர்களும் நிம்மதியாக வீட்டைப் பராமரித்துக் கொண்டார்கள்.
காலம் கடந்திட குமரன் வயது மூப்புக் காரணமாக சுகயீனம் அடைந்திட தனது எண்பத்து ஒன்பதாவது வயதில் உலகத்தை விட்டுப் பிரிந்தார்.இத்தனைக் காலமும் ஒருவருக்கு ஒருவர் அனைத்து விடயங்களிலும் துணையாக இருந்த காலம் மாறிட, கோகிலாவும் மனதாலும் வயதாலும் சோர்வடைந்திட அவளை ஒவ்வொரு பிள்ளையும் “இந்த வயதில் அம்மா தனியாக இருக்க வேண்டாம் நீங்க பெற்ற பிள்ளைகளிடம் வாருங்கள்” என அழைத்தார்கள். அதற்கு கோகிலா சம்மதிக்கவில்லை. அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாது வாழும் நிலையை வரமாகவும் தவமாகவும் எண்ணி யாருக்கும் சுமையாகாது வாழ்ந்திடவே விரும்பினாள். எனவே பிள்ளைகளும் அம்மாவின் விரும்பத்திற்கு மதிப்பளித்து அந்த வீட்டில் வைத்தே மிகுந்த கவனமாக கவனித்தார்கள்.
பிள்ளைகள் மாறி மாறி அப்பா அம்மா பிள்ளைகள் என வாழ்ந்த இத்தனைப் பெரிய வீட்டில் அம்மா மட்டும் தனித்திருக்க வேண்டாமென்று தத் தமது வீட்டுகளுக்கு அழைத்தப் போதும் கோகிலா கணவனும் தானும் இணைந்து கோயிலாக வைத்திருந்த வீட்டை விட்டுச் செல்ல விரும்பாத நிலையில் கோகிலா பெற்ற பிள்ளைகளும் நிறைவாக ஒத்துழைத்தார்கள்.
காலப் போக்கில் நோய் நொடி என்று படுக்கையில் ஓய்ந்துவிடாது, எண்பத்து ஐந்து வயதிலும் திடகாத்திரமாகவே வாழ்ந்தாள் கோகிலா.
அன்று கோகிலாவின் எண்பத்து ஆறாவது அகவை தின கொண்டாடத்திற்காக பிள்ளைகள், மருமக்கள்,பேரப் பிள்ளைகள், உறவுகவுகள் என வீடே அமர்க்களமாகிட இவளும் என்றுமில்லலாத மகிழ்ச்சியில் திளைத்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
கொண்டாட்டம் முடிய வந்தவர்கள் அனைவரும் அவரரவர் இல்லம் புறப்பட்டார்கள்.
நீண்ட நாட்களின் பின் தான் விரும்பிய அனைத்து நல் உள்ளங்களும் ஒன்று கூடி இணைந்திட கிடைத்ததை மனது நினைக்க நினைக்க இன்பமே நிறைந்தது.
அடுத்த நாள் காலை விடிய வீடு வெறிச்சோடிய நிலையில் அவளுக்கும் மனது ஏதோ வலிக்கத் தான் செய்தது.
என்ன தான் சுயமாக சில விடயங்களை வெறுத்து புறந்தள்ள நினைத்தாலும் இயல்பாக அதை நடைமுறைப்படுத்துவதில் சில அசௌகரியங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை உணர்ந்திட, பெற்ற பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிளைளைகள் அருகில் இருப்பது போல ஒரு சுகம் வராது என எண்ணினாள். அப்போதுதான் ஒரு ஏக்கத்துடன் கோகிலாவினது மனது தவிப்புக்குள்ளாகி தத்தளித்தது அவளுக்குப் புரிந்தது.
முற்றும்.















