இலங்கையில் ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் காலியில் உள்ள கராபிட்டி வைத்தியசாலையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என அரச மருத்துவ அதிகார சங்கத்தின் மருத்துவர் ஹரிதா தெரிவித்துள்ளார். திருமணமான இவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்றிய நிலையில் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்ற கயான் தந்தநாராயண சீனாவின் ரியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ கற்கையை நிறைவு செய்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியராக தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து ராகமை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 தொற்றுடன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இவரது நோய் நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 323 மரணங்கள் பதிவான நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இவரது மரணத்தை அடுத்து இதுவரை இலங்கையில் 324 கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.