சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்)
ஐ நா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக, `அடிக்க அடிக்க அம்மியும் நகரும்` என்பதற்கு ஏற்ப-பன்னாட்டு அரங்கில் வாங்கிய அடியின் காரணமாக சில மாறுதல்களை ஏற்படுத்த உதட்டளவில் இசைவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம், மனித உரிமைகளைப் பேணுதல், அரசியல் கைதிகள் விடுதலை என்று சில விஷயங்களில் பம்மாத்து காட்ட அரசு எத்தனிக்கிறது.
ஆனால் அரசுஇதய சுத்தியுடன் எதையும் செய்யாது, செய்ததில்லை என்பதே யதார்த்தமாக இருந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தால் ஒரு புறம் சர்வதேசத்தின் அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டுள்ள இலங்கை, ஜி எஸ் பி+ விஷயத்தில் வெளிப்படையாக ஏதும் செய்யாவிட்டால் பறிபோகும் நிலையில் இருக்கும் சலுகையை தக்கவைத்துக் கொள்ள முடியாது.
அது பல நாடுகள் தொடர்புடைய விஷயம். ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானம் அந்த சலுகையைத் இலங்கைக்கு அளிக்கும் பல நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ஜி எஸ் பி + தக்கவைத்து கொள்ள மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
ஆனால் இலங்கை அரசோ ஐரோப்பிய சந்தைகள் குறித்த யதார்த்த நிலையை உணரலாம் மேம்போக்காக செயல்படுகின்றன என்று தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு தொழிலாளர்களின் உரிமைகளைப் புறக்கணிக்க அரசு தொடர்ந்து முயல்கிறது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சிறுபான்மையினரை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியது.
ஊடகங்களை அடக்குதல், சட்டத்தின் ஆட்சி இல்லாமை, காணாமல் போதல், கைதின் போதான கொலைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் மற்றும் தொழிலாளர் உரிமைகளை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை பரவலாக கண்டனத்திற்கு ஆளானது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது உட்பட மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இலங்கையை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உதவிகளை இழக்கும் அபாயங்கள் ஏற்படுமென, ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி + வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்பாக கடந்த வாரம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில் தலையீடு செய்வதை தொழிற்சங்க தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு தரப்பு கூறியதாக செய்திகள் கசிந்தன.
மனித உரிமைகள் மீறல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய விடயங்கள் குறித்து மாத்திரமே ஐரோப்பிய நாடாளுமன்றம் நிபந்தனைகளை வகுத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கூறியபோது, அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் தொழிற்சங்கத் தலைமையின் முறைப்பாடு எதுவும் இன்றி தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளது, நாட்டில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் எவ்வித பிரச்சனைகளையும் எதிர்நோக்கவில்லை என்று அரசு தரப்பு கூறியதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி எஸ் பி+ சலுகையை நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுடன் தொடர்பு படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது. இதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தாங்கள் விளக்கவுள்ளதாகவும் அரச தரப்பு எண்ணுகிறது என்று கசிந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தரநிலைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி தொழிலாளர் உறவுகளுக்கான நடத்தை விதிகளைத் தயாரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து “எந்தவொரு பிரச்சினையும் எழுப்பப்படவில்லை” எனக்குறிப்பிட்டுள்ள தொழில் அமைச்சர் நிமல்சிரிபாலடிசில்வா “தொழிலாளர் உரிமைகள் குறித்து எதுவும் பேசுவதற்கில்லை” எனவும் கூறியுள்ளார்.
தொழில் அமைச்சரின் கருத்துக்களுக்குப் பதிலளித்த சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ், அமைச்சர்கள் இவ்வாறு வாதிட்டால், சர்வதேச அமைப்புகளிடம் ஆதாரத்துடன் தொழிலாளர்களில் நிலை எடுத்துச் செல்லப்படும் என்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மூத்த தொழிற்சங்கத் தலைவர் ஆண்டர் மார்கஸ் எச்சரித்துள்ளார்.
“இதற்கமைய, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையுடன் தொடர்புடைடைய, இலங்கை அரசு கையெழுத்திட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உடன்படிக்கையை யதார்த்தமாகவும் சட்டரீதியாகவும் நடைமுறைப்படுத்த பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு அதை உறுதிப்படுத்துமாறும் கோரப்படும்” என அன்டன்மார்கஸ் கூறியுள்ளார்.
2017இல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் பெறுவதற்கு, உதவிய தொழிற்சங்கங்களிடம் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை என்று அரசுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்ற மற்றொரு மூத்த தொழிற்சங்கவாதி லீனஸ் ஜயதிலக தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற வரிச்சலுகையை முதலாளிகளும் அரசிலுள்ள சிலருமே அனுபவித்து வருகின்றனர், உழைக்கும் தொழிலாளிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றனர் என்கிறார் ஜயதிலக.
“இப்போது வரை, முதலாளிகள் மட்டுமே ஜி.எஸ்.பி பிளஸின் மூலம் பயனடைந்துள்ளனர். மறுபுறம், இந்த சலுகையின் காரணமாக, அந்நிய செலாவணி இருப்புக்கள் மேம்பட்டுள்ளதால் நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பால் அரசாங்கங்கள் பயனடைந்துள்ளன.அவ்வளவுதான். தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை. இது ஒரு அநீதி என்றும் அதைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அப்போதைய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையின் 50% நன்மைகளை இந்த துறையில் உள்ள ஊழியர்கள் பெற வேண்டும் என அவர் கூறினார்.இந்த சலுகையால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக-பொருளாதார நிவாரணம் தொடர்பிலான இணக்கத்துடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, ஆனால் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த சட்டத்தையும் கொண்டு வரவில்லை”எனலீனஸ்ஜயதிலககூறியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளையும் நாட்டில் நிலவும் இதர மனித உரிமை மீறல்களையும் அரசு பிரித்துப் பார்த்து பிளவு ஏற்படுத்தி அதில் இலாபம் அடைய விழைகிறது என்று தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. தொழிலாளர் உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகளின் ஒரு பங்கு என்பதை அரசு ஏற்க மறுப்பது அதன் அறிவிலித்தனமான பிடிவாதத்தைக் காட்டுகிறது என்று அரசுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை மட்டுமல்ல உழைக்கும் மக்களை அடக்குவதற்கும் ஏராளமான சந்தர்ப்பங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் தொழிற்சங்கத் தலைவர்கள், பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலைகளுக்கும் சிறுபான்மையினருக்கும் சம்பந்தம் இல்லை என்று அரசு கருதுகிறது. எனவே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் விஷயத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று அரச தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆயத்த ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் தென்னிலங்கை சிங்கள மக்களே எனவே அவர்களுடன் சிறுபான்மையினரின் உரிமைகளை முடிச்சுப் போடக் கூடாது என்று அரசு கூறுவது அறிவிலித்தனம் மட்டுமல்ல தீய எண்ணம் கொண்டதும் ஆகும் என்கிறார்கள் தொழிற்சங்கவாதிகள். உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செயல்படும் ஆடைத் தொழிற்சாலையில் 90% அதிகமானவர்கள் தமிழர்கள். இது தவிர வடக்கு கிழக்குப் பகுதிகளில் மேலும் சில ஆடைத் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான திட்டமும் இலங்கையில் உள்ளது. அப்படியான சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் சிறுபான்மையினருக்கும் தொடர்பில்லை என்று அரச தரப்பில் எண்ணுவது ஏற்புடையது அல்ல என்கிறார் அந்தக் கூட்டத்திற்குச் சென்றவர்கள்.
“ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் இன்று தொழிலாளர் வர்க்கம் மிகவும் பலவீனமான அமைப்பு நிலையில் உள்ளது.
மொத்த தொழிலாளர் வர்க்கத்தில் 7% மாத்திரமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் ஏற்றுமதி துறையில் உள்ள ஊழியர்களை பார்த்தால், 5% கூடஒழுங்கமைக்கப்படவில்லை என்றார் ஆண்டன் மார்க்கஸ். அதுவே இந்த ஆயத்த ஆடைத்துறையின் மிகப்பெரிய பலவீனமாகவும் பேரம் பேச முடியாத நிலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இணக்கம் தெரிவிக்கப்பட்ட மனித உரிமைக் கடமைகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்பதை நிரூபித்தால், தற்போதுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்த தீர்மானத்துடன் இணைந்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருடம் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை நிலைமையை மதிப்பாய்வு செய்யும். சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை கடமைகளைச் செயல்படுத்துவதையும் இது உள்ளடக்கியுள்ளது.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்றத்தவறியதால் கடந்த 2010 பிப்ரவரி மாதம் இந்தச் சலுகை இடைநிறுத்தப்பட்டது.பின்னர் `நல்லாட்சி அரசாங்கம்` என்று தங்களை அழைத்துக் கொண்ட அரசுமனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளைச்செயல்படுத்த உத்தரவாதம் அளித்த, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.
சீனாவுக்கு அடுத்ததாக ஐரோப்பா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.ஐரோப்பா கடந்த வருடம் இலங்கையிலிருந்து 21 கோடி யூரோ பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சக்கள் தமது சொந்த இறுமாப்புகளுக்காக விட்டுக் கொடுக்காத நிலையைத் தொடர்ந்தால், அது பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது புதிய விஷயமல்ல. அதன் தாக்கம் உள்நாட்டில் தெரியும். ஆயத்த ஆடைகளின் தயாரிப்பு முடங்கிப் போனால், நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கும். இவற்றுக்கும் மேலாக இவர்கள் வாக்குக்காக சார்ந்திருக்கும் `பௌத்த சிங்களவர்களே` ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு ஏன் உணரவில்லை?