யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
இலங்கைத்தீவின் பௌத்த மதம் அரச மதம்.புத்த பகவான் அரச போகங்களைத் துறந்து சன்னியாசம் பூண்டார். ஆனால் அவருடைய பெயரில் சங்கத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கும் இலங்கைத்தீவின் தேரவாத மகா சங்கங்கள் அவ்வாறல்ல. அவர்கள் அரசர்களைப் போலவே வாழ்கிறார்கள். அரசர்களைப் போலவே முடிவெடுக்கிறார்கள். அரசியலிலும் அரசர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு காணப்படுகிறார்கள்.
இலங்கைத்தீவின் பௌத்தமத பீடங்கள்பல நூற்றாண்டுகளாக அரசர்களுக்கு நிகராக அதிகாரத்தை கொண்டிருந்ததோடு அரசர்களோடு நெருங்கி இடையூடாடிய ஒரு பாரம்பரியத்தை கொண்டவை. எனவே அரசர்கள் சிந்திப்பதை போல ராஜதந்திரிகள் சிந்திப்பதை போல சிந்திக்க கூடிய ஒரு பாரம்பரியமும் இலங்கைத்தீவில் பௌத்த மகா சங்கங்களுக்கு உண்டு. இலங்கைத்தீவின் அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக கடந்த பல நூற்றாண்டுகளாக மகாசங்கம் காணப்படுகிறது. சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முதலிடம் கொடுக்கும் இலங்கைத்தீவின் ஒற்றையாட்சி கட்டமைப்பின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதிதான் மகாசங்கம். இந்த அடிப்படையில்தான் கடந்த வாரத்திலிருந்து மகா நாயக்கர்கள் நாட்டின் அரசியலில் தலையிட்டிருகிரார்கள்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கி நாட்டில் நடப்பவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக நாட்டில் ஒருவித அரசற்ற நிலை தோன்றியுள்ளது. இதன் விளைவாகவே மகாநாயக்கர்கள் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அரசியல்வாதிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க தொடங்கினார்கள்.
ஒருபுறம் நாடாளுமன்றத்தில் ஒரு பலமான ஆட்சியை ஏற்படுத்த முடியாத அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும். இன்னொருபுறம் யுத்த வெற்றி நாயகர்களை குப்பைத் தொட்டிக்குள் அல்லது கழிப்பறை குழிக்குள் வீசும் ஆர்ப்பாட்டக்காரர்கள். காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட கோட்டா கோகம கிராமம் அண்மை வாரங்களாக அலரி மாளிகைக்கு முன்னரும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களால் எரிச்சலடைந்த போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு முன்னரும் ஒரு குட்டிக் கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.அதற்கு மைனா கோ கம என்ற பெயரை வைத்திருக்கிறார்கள் மைனா என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பறவையின் பெயர். ஆனால் சிங்களப் பண்பாட்டில் அது ஒரு மிக இழிவான ஒரு நிந்தனை வாக்கியம் என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் பதாகைகள், சுலோகங்கள், ஓவியங்கள், சிலைகள் காண்பியப் புனைவுகள், பாடல்கள், மீம்ஸ்கள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் அந்த குடும்பம் எந்த அளவுக்கு அவமதிக்கப்படுகிறது என்று தெரியவரும். இலங்கைத் தீவின் வரலாற்றில் வேறு எந்த ஒரு அரச குடும்பமும் இந்தளவுக்கு அவ மதிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் ராஜபக்ச குடும்பத்தை போர்க்குற்றம் செய்தவர்கள் இனப்படுகொலை புரிந்தவர்கள் என்றுதான் குற்றம் சாட்டினார்கள். ஆனால் சிங்கள மக்கள் அவர்களைத் திருடர்கள் என்பதில் தொடங்கி சிங்களத்தில் காணப்படும் சகல தூஷன வார்த்தைகளாலும் திட்டுகிறார்கள்.
இது தமிழ் மக்கள் எதிர்பாராத ஒரு மாற்றம். 12 ஆண்டுகளுக்கு முன்பு பால் சோறு பொங்கி கொண்டாடப்பட்ட ஒரு குடும்பம் அதே மக்களால் இப்பொழுது எப்படி அவமதிக்க படுகிறது என்பது. இலங்கைத் தீவின் நவீன அரசியலில் சிங்கள–பௌத்த வீரத்தின் அடையாளமாக காட்டப்பட்ட குரக்கன் சால்வை எந்தளவுக்கு அவமதிக்கப்படுகிறது என்பது.
இவ்வாறாக ஒருபுறம் வீட்டுக்கு போக மறுக்கும் ஒரு அரச குடும்பம். இன்னொரு பக்கம் அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை வீட்டுக்கு போக மறுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.ஆனால் நாடு தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களுக்காக தெருக்களில் வரிசையில் நிற்கிறது. ஒவ்வொரு கிழமையும் விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு வதந்தி போதும் சந்தையை தீர்மானிப்பதற்கு என்ற நிலை. ஏறக்குறைய அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்ற நிலை தோன்றிவிட்டது. அதனால்தான் மகாசங்கம் தலையிட்டது. சிங்கள–பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்பை பாதுகாப்பதே மகா சங்கத்தின் நோக்கம். யுத்த வெற்றி நாயகர்களை அவமதிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் தர்க்கபூர்வவிளைவாக யுத்த வெற்றியையும் அவமதிக்கும் ஒரு நிலை வருவதை மகாசங்கம் விரும்பவில்லை. யுத்த வெற்றியை அவமதிப்பது என்பது அந்த யுத்த வெற்றி மூலம் பாதுகாக்கப்பட்ட சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பலவீனப்படுத்துவதுதான். எனவேதான் மகாசங்கம் தலையிட்டிருக்கிறது.
மகா சங்கத்தின் தலையீட்டை அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ராஜபக்ச குடும்பம் மகாசங்கம் கேட்டுக்கொண்டபடி நடப்பதாக உறுதி கூறியுள்ளபோதிலும், நடைமுறையில் மகாசங்கத்தின் ஆணையை மனதார ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி ஒரு ஒரு புதிய இடைக்கால ஏற்பாட்டுக்கு இடம் தர வேண்டும் என்று மகாசங்கம் கேட்டிருந்தது.அவ்வாறு பதவியை விட்டுக்கொடுக்க மஹிந்த தயாரில்லை என்று கூறப்படுகிறது. மகா சங்கத்தின் ஆணையை மஹிந்த ரசிக்கவில்லை என்றும் தெரிகிறது. அண்மையில் அவர் தனக்கு நெருக்கமான ஒருவரோடு உரையாடும் பொழுது கொத்தலாவலவின் கூற்று ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார். பண்டாரநாயக்கா சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை பலப்படுத்தி அதை ஒரு தேர்தல் முதலீடாக மாற்றி வெற்றி பெற்றபின் அவரோடு உரையாடிய கொத்தலாவல மகா சங்கத்தினரை பற்றி குறிப்பிடும் பொழுது “கட்டப்பட்டிருந்த நாயை நீ அவிழ்த்துவிட்டு விட்டாய்” என்ற தொனிப்பட எச்சரித்திருக்கிறார். அதை மகிந்த இப்பொழுது மேற்கோள் காட்டியதாக ஒரு தகவல். அதாவது மகா சங்கத்தினர் மஹிந்தவை பதவி விலகுமாறு நிர்ப்பந்திப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இது விடயத்தில் கோட்டாபயவுக்கும் மஹிந்தவுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உண்டு. அது அவர்களால் வேண்டுமென்றே வெளியில் காட்டப்படும் ஒரு நடிப்பு என்றும் வியாக்கியானம் உண்டு. தனது தம்பி, தன்னை அவ்வாறு பதவியை விட்டு அகற்றினாள் எதிர்க் கட்சிகளின் வரிசையில் போய்க் குந்தியிருப்பதற்குத் தான் தயார் என்று மகிந்த அன்மையில் தெரிவித்திருக்கிறார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோடு உரையாடும் பொழுது “நான் உங்களுடைய பக்கம் வந்து இருக்கப் போகிறேன் என்ற தொனிப்பட கதைத்திருக்கிறார்” அதாவது மகா சங்கத்தின் சொற் கேட்டு தன்னை பதவியிலிருந்து அகற்றினால் தான் எதிர்க் கட்சிகளின் வரிசையில் போய் அமர்வேன் என்ற எச்சரிக்கையை அவர் விடுகிறார்.அது கோத்தாபயவுக்கும் அச்சுறுத்தல். எதிர்க்கட்சிகளுக்கும் அச்சுறுத்தல்.
கொழும்பில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பலரும் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது உண்டு. இப்பொழுது சஜித்தின் இடத்தில் மஹிந்த இருந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதே அது. மஹிந்த தெருவில் இறங்கி போராடும் ஒருவர். அவர் இப்பொழுது எதிர்க் கட்சிகளின் வரிசையில் இருந்திருந்தால் அரசாங்கத்தை எப்பொழுதோ எதுவிதத்திலோ வீட்டுக்கு அனுப்பியிருப்பார்.
கோட்டவுடன் ஒப்பிடுகையில் மகிந்ததான் தலைவர்.தாமரை மொட்டு கட்சி என்பதே மஹிந்தவின் ஜனவசிய முகத்தை வைத்து கட்டியெழுப்பப்பட்ட ஒன்றுதான்யுத்தத்தை மகிந்ததான் வெற்றிக்கு இட்டுச் சென்றார். யுத்தத்தை எப்படி நடத்துவது, எப்படி முடித்து வைப்பது போன்ற அரசியல் முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவர் எடுத்த அரசியல் தீர்மானங்களைத்தான் கோட்டாவும் படைத்தரப்பும் நடைமுறைப்படுத்தினார்கள். பழுத்த அனுபவமுடைய தலைவர் அவர். அவரை அகற்றினால் கோத்தாபய மேலும் பலவீனமடையும் நிலமை வரலாம்.எனவே மஹிந்த தன் பதவியை விட்டு இறங்கவில்லை என்றால் மகா நாயக்கர்களின் ஆணையை அரசாங்கம் அவமதித்தது ஆகிவிடும்.
அதுமட்டுமில்ல எதிர்கட்சிகளும் மகா சங்கத்தின் சொற்கேட்டு அனைத்துக்கட்சி இடைக்கால ஏற்பாடு ஒன்றை உருவாக்க சம்மதிக்காவிட்டால், அதுவும் மகா சங்கத்தின் ஆணையை புறக்கணிப்பதாக அமையும். மொத்தத்தில் மகா சங்கத்தின் அணையை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் அவமதிப்பார்களா அல்லது அதற்குக் கீழ்ப்படிவார்களா என்பதில்தான் அடுத்த கட்டம் பெருமளவுக்குத் தங்கியிருக்கிறது. மகாநாயக்கர் கேட்பது போன்ற ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் சம்மதிக்கவில்லை என்றால் மகாசங்கம் அதை எப்படி அணுகும் ?
அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளாதவரை தம்மைச் சந்திக்க வரக்கூடாது என்று மல்வத்த பீடாதிபதி கூறிவிட்டார். அண்மையில் சஜித் பிரேமதாச இருபத்தியோராவது திருத்தச் சட்டத்தின் வரைபை எடுத்துக்கொண்டு மல்வத்த பீடாதிபதியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.ஆனால் சந்திக்க முடியவில்லை. அதுபோலவே தாமரை மொட்டு கட்சியை சேர்ந்த ஒரு குழுவினர் மல்வத்த பீடாதிபதியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். ஆனால் மகாநாயக்கரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. முன்னரும் 2018ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஒரு யாப்புக் குழப்பத்தை ஏற்படுத்திய போது அவரை மகாநாயக்கர்கள் சந்திக்க மறுத்தார்கள். இம்முறையும் அப்படித்தான் நடக்கிறது.
ஆனால் மகாசங்கத்தின் இதுபோன்ற அழுத்தங்களின் மூலம் அரசியல்வாதிகளை ஒரு வழிக்கு கொண்டு வராதவரை நாட்டின் தெருக்களிலும் காலிமுகத்திடலிலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களை வீட்டுக்கு போகுமாறு கேட்க முடியாது.அவர்கள் வீட்டுக்கு போகவும் மாட்டார்கள். ஏனெனில் எந்தக் காரணங்களுக்காக அவர்கள் தெருவில் இறங்கினார்களோ, காலிமுகத்திடலில் கூடினார்களோ,அதே காரணங்கள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்து செல்கின்றன. எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாகக் காத்திருக்கும் நீண்ட வரிசைகள் மேலும் நீண்டு செல்கின்றன. எனவே எந்தக் காரணங்களுக்காக மக்கள் தெருக்களில் இறங்கினார்களோ,அந்தக் காரணங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அதனால் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்க யாராலும் முடியாது.
முதலில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.அந்த ஸ்திரமான ஆட்சியானது வெளித் தரப்புக்களோடு, குறிப்பாக அனைத்துலக நாணய நிதியம் போன்ற அனைத்துலக அமைப்புகளோடு உறவாடி பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். எனவே பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பது என்று சொன்னால், முதலில் ஒரு ஸ்திரமான ஆட்சி வேண்டும். ஆனால் அப்படி ஒரு ஆட்சியை உருவாக்க அரசாங்கத்தாலும் முடியவில்லை, எதிர்க்கட்சிகளாலும் முடியவில்லை.மகாசங்கத்தாலும் முடியவில்லை என்பதே இலங்கைதீவில் இப்போதுள்ள பாரதூரமான நிலை ஆகும்.






















