ஏற்கனவே பல துண்டுகளாக சிதறி கிடக்கும் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு உடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது புதிய இணைவுகளுக்கான ஒரு உடைவா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவுக்கு உடையும் நிலைமைகள் தெரிகின்றன. தமிழரசு கட்சி தன்னுடைய சின்னத்தில் தமிழரசு கட்சியாகவே எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடக் கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அதனால் பங்காளி கட்சிகள் வெளியே விடப்பட்டிருக்கின்றன. இந்த விடயத்தில் தமிழரசு கட்சியின் முடிவுதான் கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரின் முடிவுமாக இருந்தால், இதுவரையிலும் இருந்து வந்த கூட்டமைப்பு என்ற கூட்டு கலைகிறது.அடுத்த கட்டமாக ஒரு புதிய கூட்டமைப்பு உருவாகலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் காணப்படும் பங்காளிக் கட்சிகள் மணிவண்ணன் உட்பட எல்லா தரப்புகளையும் ஒன்றிணைத்து அதை கூட்டமைப்பு என்ற பெயரில் பதியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக கூட்டமைப்புக்குள் அவமதிக்கப்பட்டு வந்தன. தமிழரசுக் கட்சி பங்காளிக் கட்சிகளை மதிக்கவில்லை. ஆயுதப் போராட்ட மரபில் வந்த மேற்படி கட்சிகளை சுமந்திரன் தொடர்ச்சியாக அவமதித்து வந்தார். “தமிழரசு கட்சி என்னும் மராமரத்தைச் சுற்றித்தான் பங்காளிக் கட்சிகள் என்னும் கொடிகள் அதன் சத்தைப் போஷித்து படருகின்றன.மரத்தை அழிக்க நினைத்தால்? கொடிகள் காணாமல் போகும். தற்கொலைகள் வேண்டாமே” என்று முகநூலில் கிழக்கைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்ந்திரன் எழுதுகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசியலின் வலுச்சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. கூட்டமைப்பு அதன் ஏக போகத்தை இழந்தது. கூட்டமைப்புக்குள் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய டெலோவுக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. இதனால் டெலோ அதன் குரலை உயர்த்தி கதைக்க தொடங்கியது. ஏட்டிக்கு போட்டியாக தமிழரசு கட்சியும் பங்காளிக் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்து வந்தன. கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு டெலோ இயக்கத்தின் முன்னெடுப்பில் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து நீங்கிய கட்சிகளோடு இணைந்து செயல்படத் தொடங்கின. ஐநாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது போன்ற விடயங்களில் இக்கட்சிகள் தங்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்பட்டன.
இந்த ஒருங்கிணைப்பு இனிவருங்காலங்களில் ஒரு பலமான கட்சிக் கூட்டாக உருவாக முடியும்.அதை அவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் பதிவதற்கு முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அக்கூட்டுக்கு விக்னேஸ்வரன் பொருத்தமான தலைமைத்துவத்தை வழங்குவாரா? அவர் தன்னுடைய சொந்தக் கட்சியையே கட்டிறுக்கமான ஒரு கட்சியாக கட்டியெழுப்புவதாக தெரியவில்லை. இந்நிலையில் பலமான தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றுத் தலைமையை வழங்க அவரால் முடியுமா?
கடந்த வாரம் தமிழரசு கட்சி தனித்துச் செல்வது என்று முடிவு எடுத்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார். அவர் விக்னேஸ்வரனின் கட்சிக்குள் இணைவாராக இருந்தால் பெரும்பாலும் அடுத்த யாழ் நகர முதல்வராக அவரே மீண்டும் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.
அண்மையில் அவர் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு இனிமேல்தான் நடக்கும். அதில் டெலோவும் புளட்டும் மணிவண்ணனை ஆதரித்தால் அவர்தான் அடுத்த முதல்வர். அவ்வாறு விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் மணிவண்ணன் இணைந்து அதன் மூலம் மீண்டும் யாழ் நகர முதல்வராக அவர் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால், அது நிச்சயமாக தமிழ் அரசியலில் ஒரு புதிய கூட்டுக்கான உற்சாகமூட்டும் தொடக்கமாக அமையும். விக்னேஸ்வரனின் தலைமையில் உருவாகக்கூடிய ஒரு கூட்டின் பிரகாசமான முதல் அடி வைப்பாக அது அமைய முடியும். யாழ் மாநகர சபை என்பது நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகம் கவர்ச்சி மிக்க மாநகர சபைகளில் ஒன்று. தமிழ் அரசியலைப் பொறுத்தவரை அது ஒரு கேந்திர ஸ்தானம். கூட்டமைப்பு உடைந்த பின் உருவாகக்கூடிய புதிய கூட்டின் முதலாவது வெற்றி அங்கே கிடைக்குமாக இருந்தால், அது அந்த கூட்டுக்கு கவர்ச்சியான ஒரு தொடக்கமாக அமையும்.
நிச்சயமாக அது தமிழரசுக் கட்சிக்கு புதிய சவால்களைக் கொண்டு வரும். தமிழரசுக் கட்சி தனித்து நின்று தேர்தலில் தன் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கும். கடந்த பொது தேர்தலில் தமிழரசு கட்சியின் பல பிரதானிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அக்கட்சியின் தலைவரும் செயலாளரும் தோற்றுப் போனார்கள். இந்நிலையில் ஒரு புதிய கூட்டு உருவகுமாக இருந்தால் அது ஒரு பெரும் கூட்டாக தன்னைக் கட்டியெழுப்புமாக இருந்தால் நிச்சயமாக அது தமிழரசு கட்சிக்கு தலையிடிதான்.
2009 க்குப்பின் தமிழரசியலில் ஒரு மாயை நிலவியது.கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வெற்றி பெற முடியாது என்பதே அந்த மாயை. ஆனால், அந்த மாயையை கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் விக்னேஸ்வரனும் வியாழேந்திரனும் உடைத்தெறிந்து விட்டார்கள். எனினும் கூட்டமைப்புக்குள் பங்காளிகளாக இருந்த டெலோவும் புளட்டும் தமக்கு ஏற்பட்ட எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு கட்சிக்குள்ளேயே இருந்தன. வீட்டு சின்னத்தை விட்டு வெளியேறினால் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்கள் என்று தமிழரசுக் கட்சி இப்பொழுதும் நம்புகின்றது. கடந்த பொதுத்தேர்தல் அந்த நம்பிக்கையை அவமானகரமான விதத்தில் தோற்கடித்து விட்டது. இனிவரும் தேர்தல்களில் மேற்படி இரண்டு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்க வேண்டி இருக்கும்.
இப்படிப் பார்த்தால் கூட்டமைப்பு உடைந்திருப்பது தமிழ் அரசியலில் ஒரு புதிய பல்வகைமையை ஏற்படுத்தும். ஆனால் அதேசமயம் அது வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்தையும் தோற்றுவிக்கும்.
கடந்த 13 ஆண்டு காலத்தில் குறிப்பாக கடந்த பொதுத் தேர்தல் வரையிலும் தமிழரசு கட்சியின் அரசியல் முதன்மை எனப்படுவது எதையுமே பெற்று தரவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருப்பதற்கு அல்லது கடந்த 13 ஆண்டுகளில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றி எதையும் பெறாததற்கு அது ஒரு காரணம்.அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலையொட்டி ஒரு புதிய மாற்று அணியை உருவாக்க குடிமக்கள் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் ஆர்வலர்களும் முயற்சித்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக மாற்று அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை. அதற்கு விக்னேஸ்வரனும் பொறுப்பு ; கஜேந்திரக்குமாரும் பொறுப்பு ; தமிழ் மக்கள் பேரவையும் பொறுப்பு. எனினும் இவர்கள் எல்லாரும் தமிழ் அரசியலை நொதிக்க செய்ததன் விளைவாகவே கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. அதேசமயம் மாற்று அணியை பலப்படுத்த முடியாத காரணத்தால் கூட்டமைப்பு இழந்த வாக்குகளில் மூன்றை அரசுக்கு ஆதரவான கட்சிகள் வென்றன.
இனிமேலும் அந்த ஆபத்து உண்டு. தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு பலமான ஐக்கியத்தை கட்டியெழுப்ப தவறினால் தமிழரசு கட்சியும் பெரு வெற்றி பெறாது.மாற்று அணியும் பெரு வெற்றி பெறாது. தமிழ் வாக்குகள் சிதறும்.
இதனால்,ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய பசுமை இயக்கம் போன்ற கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்து ஒரு கூட்டினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தமிழரசு கட்சிக்கு வெளியே உள்ள கட்சிகளுக்கு உண்டு.அதை அவர்கள் வெற்றிகரமாக செய்யவில்லையென்றால் தமிழ் வாக்குகள் சிதறும். அப்படிச் சிதறும்போது “மீன் கரைந்தாலும் குழம்புக்குள்தான் இருக்கிறது” என்று கூற முடியாது என்பதனை கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழரசு கட்சியின் முடிவுகளால் ஒரு புதிய ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் காலம் எதுவென்று பார்த்தால்,தமிழ் அரசியலின் சீரழிவை விளங்கிக் கொள்ளவும் முடியும். ஒரு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் பின்னணியில் கட்சிகள் புதிய சேர்க்கைகளைப் பற்றி சிந்திக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த்தரப்பு ஒற்றுமையாக இல்லை, ஒரு குரலில் பேசுவதில்லை என்று வெளிநாட்டுத் தூதரகங்கள் மட்டுமல்ல கொழும்பில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்டது ஒரு பின்னணியில் பேச்சுவார்த்தைக் காலத்தில் தமிழ்த் தரப்பில் உள்ள பெரிய கட்சியானது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இது எதிர்த் தரப்பு தமிழர்களை நோக்கி பரிகசிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும். தமிழ்த்தரப்பை உதிரிகளாகப் பிரித்துக் கையாள முடியும் என்று நம்பும் சக்திகளை உற்சாகப்படுத்தும்.