தனிமையின் தவிப்பு தள்ளாடும் வயதில்
இனியவள் இழப்பு இயலாக் காலத்தில்
கனிவான அழைப்புக் கனவாய்ப் போனபின்
இனியெது பிழைப்பு .இரவாய் ஆனபின்
ஆறுசுவை உணவு அவளுடன் போச்சு
ஆறுதல் வார்த்தை இறுதி ஆச்சு
தேறுதல் இன்றி திகைத்து நிற்கிறேன்
மாறுமா ;வாழ்க்கை மரணம் வருமுன்?
வறுமைக் காலம் வலமாய் இருந்தாள்
சிறுமை வந்திடத் திடமாய் நின்றாள்
இறுதிவரை என்னுடன் இருப்பேன் என்றாள்
அறுதியாய் அமலனிடம் அவசரமாய்ச்; சென்றதேன்?
பெற்ற பிள்ளை ;பிரியம் காட்டலை
உற்ற துணையின்றி உறக்கம் வரவில்லை
சுற்றம் என்போர் சொத்தைக் கேட்டனர்
அற்ற குளத்து அறுநீர்ப் மீனானேன்
இல்லாள் அகத்திருக்க இல்லா தொன்றில்லை
எல்லாம் போனது எழிலரசி போனபின்
சல்லியன் இல்லாச் சகடம் போலானேன்
சல்லிபோல் நொருங்கி; தனித்து நின்றேனே!.
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453
Chandranvela07@gmail.com
குறிப்பு : 2020ம் ஆண்டு விலா கருணா நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுக்கொண்ட கவிதை.






















