ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரும், இளையோருக்காகக் கனடாவில் வெளிவரும் ‘வதனம்’ இதழ் குழுவினரும் ஒன்றிணைந்து ‘ஆடிப்பிறப்பை’ சென்ற ஞாயிற்றுக் கிழமை 26-7-2026 அன்று சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் பெற்றோரும், பிள்ளைகளும், வதனம் இதழ் நிர்வாகக் குழுவினரும் வாசகர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே, கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!’ என்ற நவாலியூரில் பிறந்த சோமசுந்தரப் புலவரின் பாடலுக்கு சிறுமிகளின் குழு நடனம் இடம் பெற்றது.

சிறுவர்கள், இளையோரின் பாடல், ஆடிப்பிறப்பு சார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் ஈழத்தமிழரின் பணண்பாட்டு உணவான ஆடிக்கூழும், கொளுக்கட்டையும் பரிமாறப்பட்டது. ஏனைய கூழ்களைவிட ஆடிக்கூழ் வித்தியாசமானதாக இனிப்பாக இருக்கும். இனிப்புக்காகப் கற்பகவிருட்சம் என்று சொல்லப்படு பனை மரத்தின் பதநீரில் இருந்து பெறப்படும் பனங்கட்டியையும், தேங்காய்ச் சொட்டு என்று சொல்லப்படும் தேங்காயின் சிறிய துண்டுகளையும் பாவிப்பார்கள்.
ஆடிமாதம் முதலாம் நாள்தான் தட்சணாயணத்தின் தொடக்கதினமாகும். இந்த நாளில் இருந்து சூரியன் தென்திசை நோக்கிச் செல்வதால், கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக ஏற்படும் வழக்கமாக ஆசிய நாடுகளில் இருக்கிறது. அதனால் இந்த நாளை இயற்கை சார்ந்த விசேட பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தமிழ் நாட்டில் இதை ஆடிப்பெருக்கு என்றும் சொல்வார்கள். ‘ஆடிவிதை தேடி விதை’ என்ற முன்னோர் மொழியும் தமிழில் உண்டு.

இலங்கையில் நாங்கள் படிக்கும் காலத்தில் ஆடிப்பிறப்பன்று விடுமுறை விடுவார்கள். எமது பண்பாட்டோடு கலந்த முக்கிய நிகழ்ச்சியாக அன்று இந்தக் கொண்டாட்டம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இவையெல்லாம் திட்டமிட்டு மறுக்கப்பட்டதால், பலரால் மறக்கப்பட்டும் போய்விட்டது. இங்குள்ள இளைய தலைமுறையினரும் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த நிகழ்வு கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் கனடாவில் முன்னெடுக்கப்பட்டது. உள்ளக நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சிறுவர்கள், பெரியவர்களுக்கான வெளிக்கள நிகழ்ச்சிகளும், போட்டிகளும் இடம் பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்றன.
குரு அரவிந்தன்















