’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து தமிழகஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. ‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்’ இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.
















