தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு 2026 ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி போட்டியிட்டன. தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டன. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். எனினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தலில் களம் கண்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடமும், அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடமும் பிடித்தன. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைத்தது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பெரும்பான்மையையும் நிரூபித்தது. இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு, அக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், கட்சி பொதுக்குழு நடைபெற்றது. இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஒன்றாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எடுத்துள்ளது.






















