தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தமிழ் முருகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் மைல்ஸ் டூ கோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘தமிழ் முருகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் இந்தப் படத்திற்கு அறிவுமதி திரைக்கதை எழுத, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பீரியட் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கான முதல்காட்சி பதாகை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் முதல்கட்சி காணொளியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், “தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன், வீரன், மன்னன் மற்றும் தலைவன்” என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார். காணொளியில் வேல் ஏந்தியபடி யானையின் மீது அமர்ந்து வரும் கதாநாயகனின் தோற்றம் இடம்பெற்றுள்ளதால், படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இதற்கிடையில், இயக்குநர் திரிவிக்ரம் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் முருகனை மையமாகக் கொண்ட திரைப்படம் உருவாகி வருவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களின் பின்னணியில், ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தின் அறிவிப்பு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை 2’ உருவாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘தமிழ் முருகன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது


















